ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித், அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பியபோது, ’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’அரபிக்குத்து’ பாடல் ஒலிக்கப்பட்டதால், இந்திய அணியின் ரசிகர்கள் ஆரவாரமாக சத்தம் போட்டனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 3-வது மற்றும் கடைசிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் க்ரீன் மற்றும் இறுதியில் களமிறங்கிய டிம் டேவிட் இருவரின் அதிரடி அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. பின்னர், களமிறங்கிய இந்திய அணியின் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி அதிரடியாக விளையாடி, சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டனர். இறுதியில் பவுண்டரி அடித்து ஹர்திக் பாண்டியா போட்டியை முடித்து வைத்தார். இதையடுத்து, இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா பேட்டிங்கின்போது ஸ்மித் அவுட்டாகி பெவிலியனுக்கு நடந்து சென்றபோது, மைதானத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’அரபிக்குத்து’ பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்மித் அவுட்டானதால் உற்சாகத்தில் இருந்த இந்திய ரசிகர்கள், அரபிக்குத்து பாடல் மைதானத்தில் ஒலித்தவுடன் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆரவாரமாக சத்தம் போட்டனர். சர்வதேச அளவில் அரபிக்குத்து பாடல் ஹிட் என்றாலும், ஹைதராபாத் மைதானத்தில் தமிழிலேயே பாடல் ஒலிப்பரப்பட்டது.
அரபிக்குத்து மட்டுமின்றி, ஒவ்வொரு ஓவர் முடிவிலும், ஒவ்வொரு சிக்ஸர், பவுண்டரி, விக்கெட்டுகளுக்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட பாடல்கள் ஒலிப்பரப்பட்டது. தமிழ் பாடல்களான ‘நாக்கு முக்கா’, ‘என் பேரு மீனாக்குமாரி’ பாடல்களும் ஒலிப்பரப்பட்டன.