இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாக தவிர்க்க முடியாத பெயர் விராட் கோலி. அந்தளவுக்கு தனது அபார பேட்டிங்கால் இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து தந்துள்ளார். எதிரணி எவ்வளவு ரன்கள் அடித்தாலும் பரவாயில்லை, கோலி நிலைத்து நின்றால் வெற்றி இந்திய அணிக்கு என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது. டெஸ்ட், ஒருநாள், டி20 என்று அனைத்து போட்டிகளிலும் கோலி கில்லியாக வலம் வந்தார். குறுகிய காலத்தில் அதிக சதங்களையும் விளாசினார். இதன் காரணமாக தோனிக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு கோலி வசம் சென்றது.
கேப்டனாகி சிறிது காலம் சிறப்பாக செயல்பட்டாலும், 2019ஆம் ஆண்டுக்கு பிறகு கோலியின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. ஒரு காலத்தில் போட்டிக்கு போட்டி சதமடித்து அசத்தியவர், கடந்த 31 மாதங்களாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக 2019இல் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சதமடித்தவர், அதன் பிறகு சதமடிக்க திணறி வருகிறார். ‘அவுட் ஆஃப் பார்ம்’ காரணமாக பேட்டிங்கில் கவனம் செலுத்த, இந்திய அணி மற்றும் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் அவர் விலகினார். அதன் பிறகும் கோலியின் செயல்பாடு சிறப்பாக இல்லை.
ஐ.சி.சி. தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் கூட கோலி 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதனால், முன்னாள் கேப்டன் கபில் தேவ் உள்ளிட்டோர், ‘கோலி அணியில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.’ என்று கூறிவருகின்றனர். அதேநேரத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, கங்குலி உள்ளிட்டோர் ‘கோலி மீண்டு வருவார்.’ என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பிறகு பாபர் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘இதுவும் கடந்து போகும். வலிமையோடு இருங்கள்.’ என்று கோலியுடன் எடுத்த படத்துடன் பதிவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 பேட்டிங் தரவரிசையில் இரண்டிலுமே பாபர் அசாம்தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.