இன்று நடைபெறும் ஆசியக் கோப்பை தொடரில் களமிறங்குவதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைக்க உள்ளார்.
இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே மைதானத்தில் தான் கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் முதன்முறையாக, பாகிஸ்தானிடம் தோற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தப் போட்டியில் களம் இறங்குவதன் மூலம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சாதனை படைக்க உள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வடிவப் போட்டிகளிலும், 100 ஆட்டங்களில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். சர்வதேச அளவில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தான் இதற்கு முன்னதாக இந்த சாதனையை படைத்துள்ளார். அடுத்ததாக சர்வதேச அளவில் 2-வது வீரராக விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்த உள்ளார்.
இந்தியாவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை சுனில் கவாஸ்கரும், 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை கபில் தேவும், 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஹர்மன் ப்ரீத் கவுர் பெற்ற நிலையில், அனைத்து வடிவங்களிலும் 100 ஆட்டங்களை தொட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமை விராட் கோலியை சேர்ந்துள்ளது. 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8074 ரன்களும், 262 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12344 ரன்களும், 99 டி20 போட்டிகளில் விளையாடி 3308 ரன்களும் இதுவரை விராட் கோலி எடுத்துள்ளார்.