‘சூர்யகுமார் யாதவை ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு போதிய பணம் யாரிடமும் இல்லை’ என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ். டி20 உலகக் கோப்பை தொடரில் 239 ரன்கள் குவித்து முதலிடத்தை உறுதி செய்த சூர்யக்குமார் யாதவ், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 111 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் 32 வயதான சூர்யகுமார், ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
ஏற்கனவே நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சூர்யகுமாரை பாராட்டிய நிலையில், தற்போது ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேக்ஸ்வெல் பேசுகையில், ”நியூசிலாந்து அணிக்கு எதிராக சூர்யகுமார் ஆடிய இன்னிங்ஸ்ஸை பார்த்து மிரண்டு போனேன். அனைத்து வீரர்களையும் கடந்து மிகச்சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். அவருக்கு அருகில் இப்படியான ஷாட்களை விளையாடக் கூடிய வீரர்கள் தற்போது யாரும் இல்லை” என்று தெரிவித்தார்.
வருங்காலத்தில் பிக் பாஷ் லீக்கில் சூர்யகுமார் ஒப்பந்தம் செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு மேக்ஸ்வெல் பதில் அளித்த போது, “அவரை வாங்குவதற்கு பிக்பாஷ் லீக் அணிகளிடம் போதுமான பணம் இல்லை. அவரை வாங்குவதற்கான பணத்தை ஈட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொருவரையும் நீக்க வேண்டும்” என புன்னகையுடன் தெரிவித்தார்.