இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில், இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. முதல் போட்டி இன்று இரவு மொஹாலியில் நடக்கிறது. ஆசியக் கோப்பை தொடரில் அடைந்த தோல்விகளில் இருந்து மீள்வதுடன், டி20 உலகக் கோப்பை தொடருக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்திய அணிக்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும். ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பதால், பவுலிங் வலுப்பெறக்கூடும்.
ஆசியக் கோப்பை தொடரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதம் விளாசிய விராட் கோலி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு எதிராகவும் ரன் குவிப்பை தொடர்வார் என எதிர்பார்க்கலாம். ரவீந்திர ஜடேஜா காயமடைந்துள்ளதால், அவரது இடத்தில் ரிஷப் பண்ட்-க்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாயினிஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இல்லாமல் இந்தியாவுக்கு எதிரான தொடரை சந்தித்தாலும், வலுவான அணியாகவே கருதப்படுகிறது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் சமீப காலமாக போதிய ரன் எடுக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில், பழைய நிலைக்கு திரும்ப இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ளும் முனைப்பில் உள்ளார்.