Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது பிரிந்த மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் இடையே அமெரிக்க நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.. இந்த வழக்கில், 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் சுமார் ₹15,278 கோடி) மதிப்பிலான பத்திரம் (bond) செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்த உத்தரவு, குழந்தை காவல் (child custody), திருமண காலத்தில் சேர்க்கப்பட்ட சொத்துகள், Zoho நிறுவனத்தின் பங்குச் சொந்தம் போன்ற விஷயங்களில் இடம்பெற்றுள்ள உயர் பிரபல சட்டப்போருக்கு மீண்டும் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த உத்தரவு, ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த அவசர மனுவை தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த உத்தரவை “முன்னெப்போதும் இல்லாத ஒன்று (unprecedented)” என்று நீதிமன்றமே குறிப்பிட்டிருந்தாலும், திருமணச் சொத்துகளின் மீதான ஸ்ரீனிவாசனின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவே இது அவசியம் எனவும் தெரிவித்தது.
இந்த வழக்கு, தம்பதிகள் கலிஃபோர்னியாவில் வாழ்ந்த கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் சேர்த்த சொத்துகளை மையமாகக் கொண்டுள்ளது. கலிஃபோர்னியா சட்டப்படி, திருமண காலத்தில் பெறப்பட்ட எந்த சொத்தும், அது எங்கு வைத்திருந்தாலும், இருவருக்கும் சம உரிமையுடையதாக கருதப்படுகிறது.
வழக்கின் பின்னணி
தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு, சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் ஆவார். 1989-ல் அமெரிக்கா சென்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் PhD செய்யத் தொடங்கினார். 1993-ல் கல்வியாளரும் தொழிலதிபருமான பிரமிளா ஸ்ரீனிவாசனை திருமணம் செய்தார். 1996-ல் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர் ஒருவருடன் சேர்ந்து AdventNet நிறுவனத்தை தொடங்கினார். இது 2009-ல் Zoho Corporation என்று பெயர் மாற்றப்பட்டது.
அவர்கள் கலிஃபோர்னியாவில் சுமார் 30 ஆண்டுகள் வாழ்ந்தனர். இவர்களுக்கு 26 வயது மகன் ஒருவர் உள்ளார்.. அவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.. 2019-ல் ஸ்ரீ தர் வேம்பு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தமிழ்நாட்டிலுள்ள தனது சொந்த கிராமத்திலிருந்து Zoho-வை நடத்தத் தொடங்கினார்.
2021-ல் விவாகரத்து வழக்கு தொடங்கப்பட்டது. ஸ்ரீதர் வேம்பு இந்தியாவுக்கு சென்ற பிறகு, தன்னையும் சிறப்பு தேவைகள் கொண்ட தங்கள் மகனையும் கைவிட்டுவிட்டார் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் பிரமிளா ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளார்.. மேலும் “Zoho நிறுவனத்தின் அறிவுசார் சொத்துகள் (Intellectual Property), உரிமைப் பங்குகள் இவற்றை தனது அனுமதி இல்லாமல், சிக்கலான பரிவர்த்தனைகள் மூலம் இந்தியாவுக்கு மாற்றியுள்ளார். Zoho பங்குகளில் பெரும்பாலானவை அவரது சகோதரர்கள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன..
அதாவது சகோதரி ராதா வேம்பு – சுமார் 47.8% பங்கு, சகோதரர் சேகர் வேம்பு – சுமார் 35.2% பங்கு, ஸ்ரீதர் வேம்பு – சுமார் 5% பங்கு (இதன் மதிப்பு சுமார் $225 மில்லியன்) இந்த மாற்றங்கள், கலிஃபோர்னியாவின் community property சட்டங்களை மீறுவதாக ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டினார்.
எனினும் பிரமிளாவின் இந்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீதர் வேம்பு மறுத்துள்ளார். மேலும் “இவை அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனைக் கதைகள்” என தெரிவித்ததுடன், தன் மனைவிக்கும் மகனுக்கும் தொடர்ந்து நிதி உதவி செய்து வருவதாக கூறினார்.
இந்த பத்திர உத்தரவு குறித்து செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, வேம்புவின் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சி. மெல்சர் “ இந்த உத்தரவு சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே வழங்கப்பட்டது. தவறான தகவல்களின் அடிப்படையில் இது பிறப்பிக்கப்பட்டது. பிரமிளா ஸ்ரீனிவாசனுக்கு, Zoho-வின் முதன்மை நிறுவனத்தில் வேம்புவிடம் உள்ள பங்குகளில் 50% ஏற்க முன்மொழிவு செய்யப்பட்டிருந்தது.. ஆனால் அவர் அதை நிராகரித்தார். இந்த பத்திர உத்தரவு செல்லாதது, நடைமுறைப்படுத்த இயலாதது, தற்போது மேல்முறையீட்டில் இருப்பதாகவும் கூறினார். இந்த விவகாரம் குறித்து ஸ்ரீதர் வேம்பு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்த வழக்கின் முடிவு, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஸ்ரீதர் வேம்புவின் எதிர்காலத்தையும், Zoho நிறுவனத்தின் உரிமை அமைப்பையும்
முக்கியமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



