தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த மனோஜ் பாண்டியன் இணைந்த நிலையில் நேற்று முன் தினம் அதிமுகவின் டெல்டா முகமாக அறியப்பட்ட வைத்திலிங்கம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதே போல் மாற்றுக் கட்சிகளில் இருந்தும் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர்..
இந்த நிலையில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் SVSP மாணிக்கராஜா இன்று திமுகவில் இணைந்தார். டிடிவி தினகரனின் வலது கரமாக இருந்த அவர் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில், தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.. டிடிவி தினகரன் அர்த்தமில்லாத கூட்டணியை அமைத்ததால் இந்த முடிவை எடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். அமமுகவின் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளராக இருந்த மாணிக்கராஜா, NDA-வுக்கு ஆதரவாக பணியாற்றுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளதால் டிடிவி தினகரன் மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.



