திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு (25). இவர், திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்தார். நேற்று மதியம் டில்லிபாபு பணிபுரியும் நிறுவனத்திற்கு 2 நபர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் டில்லிபாபுவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் டில்லிபாபுவைச் சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த டில்லிபாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த இருவரும் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்ட சக ஊழியர்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், டில்லிபாபுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கொலையில் ஈடுபட்டது வினோத் (24) மற்றும் அவரது நண்பர் மோகன் என விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டபோதுதான், கொலைக்கான உண்மை பின்னணி தெரியவந்தது. விசாரணையில், கைதான வினோத்தின் மனைவி நிவேதாவுடன், உயிரிழந்த டில்லிபாபுவுக்குப் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதல் உறவாக மாறியுள்ளது.
தனது மனைவி நிவேதா மீது சந்தேகம் கொண்ட வினோத், அவரைக் கண்காணித்தபோது இந்த தொடர்பைக் கண்டறிந்தார். வினோத் தனது மனைவியிடம், “நமது வாழ்க்கைக்கு இந்த உறவு சரியல்ல, இதைக் கைவிடுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், டில்லிபாபுவையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளார். இருப்பினும், டில்லிபாபுவும் நிவேதாவும் தொடர்ந்து பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வினோத், நேற்று முன்தினம் இரவு டில்லிபாபுவுடன் மீண்டும் இது தொடர்பாகச் சண்டையிட்டுள்ளார். அப்போது, ஆத்திரம் தலைக்கேறிய வினோத், தனது நண்பர் மோகனை அழைத்துக் கொண்டு, டில்லிபாபு பணிபுரியும் கம்பெனிக்குள்ளேயே நேரடியாகச் சென்று அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : பெண் குழந்தைகள் பிறந்தால் ஆணாக மாற்றும் பெற்றோர்கள்..!! இப்படி ஒரு விநோத பழக்கமா..? எங்கு தெரியுமா..?



