ஆசியாவின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வானிலையின் காரணமாக, இதுவரை சுமார் 1,000-க்கும் உயிரிழந்துள்ளனர். கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் மற்றும் பருவமழை தாக்கம் :
இந்தோனேசியா, இலங்கை, தெற்கு தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் பொதுவாக இந்த நேரத்தில் வடகிழக்குப் பருவமழையால் கனமழை பொழியும். இந்தக் காலத்துடன் 3 வெப்பமண்டலச் சூறாவளிகளும் ஒரே நேரத்தில் ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையத்தின் தரவுகளின்படி, கடந்த வாரத்தில் மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்து வழக்கத்தை விட மிக அதிக மழைப்பொழிவைப் பெற்றுள்ளன.
அதிக பாதிப்புக்குள்ளான இந்தோனேசியா :
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடுமையான புயல் மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 442 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 402 பேரை காணவில்லை. அதேபோல, தாய்லாந்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மலாக்கா நீரிணையைச் சுற்றி வந்த ‘சென்யார்’ (Senyar) புயல், தற்போது தென் சீனக் கடலில் மறைந்துவிட்டதாக ஹாங்காங் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலும் கடும் உயிரிழப்பு :
இலங்கையிலும் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலியானவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை அன்று கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து, 334 ஆக உள்ளது. மேலும், 370 பேரை காணவில்லை. வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் கரையைக் கடந்த ‘டிட்வா’ (Ditwah) புயல், திங்களன்று தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் கனமழையை கொண்டுவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘கோட்டோ’ (Koto) புயல் வியட்நாமின் கிழக்குப் பகுதியில் சுழன்று கொண்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் இது படிப்படியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டாலும், இது மத்திய மற்றும் வடக்கு வியட்நாமிற்கு இன்னும் அதிக மழையைக் கொண்டு வர வாய்ப்புள்ளது. இந்தப் பகுதிகள் ஏற்கனவே புயல்களால் கடுமையாக தாக்கப்பட்டதோடு, $3 பில்லியனுக்கும் (சுமார் ரூ.25,000 கோடி) அதிகமாகப் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : விண்ணைத் தொட்ட காய்கறி விலைகள்..!! ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.140..!! தக்காளி, வெங்காயம் எவ்வளவு தெரியுமா..?



