தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவற்றின் உடல்நலனையும், சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு, பெங்களூரு மாநகராட்சி (BBMP) புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிகரித்துவரும் தெரு நாய் தொல்லைகள் நமது நாட்டில் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெங்களூருவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 7 ஆயிரம் பேரை தெரு நாய்கள் கடித்துள்ளதாம். போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால் தான் நாய்கள் இவ்வாறு தாக்குவதாகவும், ஆகையால் அவற்றுக்கு சிக்கன் ரைச் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
‘குக்கிர் திகார்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், நகரம் முழுவதும் உள்ள 5,000 தெரு நாய்களுக்கு தினசரி சிக்கன் ரைஸ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நாய்க்கும் 367 கிராம் சிக்கன் சாதம் வழங்கப்படும் நிலையில், ஒரு நாய்க்கான உணவுக்கட்டணம் ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான ஆண்டு செலவு ரூ.2.88 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டம் முதற்கட்டமாக பெங்களூருவின் எட்டு மண்டலங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 500 நாய்களுக்கு உணவளிக்க தனித்தனியாக டெண்டர் அழைக்கப்பட்டுள்ளதாக BBMP தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “தெரு நாய்களுக்கு உணவளிப்பதன் மூலம் அவை ஒன்றாகக் கூடுவதால், ரேபிஸ் போன்ற தொற்றுகள் பரவ வாய்ப்பு உள்ளது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். இருப்பினும், உணவின்றி வாடும் நாய்களின் நலனை முன்னிறுத்தி, பல்வேறு விலங்கு நல ஆர்வலர்கள் இந்த திட்டத்தை வரவேற்று உள்ளனர். மனிதர்கள் போலவே நாய்களும் உயிருள்ள உயிர்கள் என்பதால், அவற்றுக்கும் தினசரி சத்தான உணவு கிடைக்க வேண்டியது முக்கியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.