விமானத்தில் பயணம் செய்யும் போது, சீட் பெல்ட் கட்டி, கண்களை மூடி ஓய்வெடுக்க முயற்சிக்கும் தருணத்தில், திடீரென யாரோ ஒருவர் தங்கள் மொபைல் போனிலிருந்து ஹெட்ஃபோன் இல்லாமல் சத்தமாக பாடலை ஒலிக்க விடுவது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைக்கு தற்போது மத்திய அரசு பதில் அளித்துள்ளது. விமானத்தில் இப்படிச் செய்வது, ஒழுங்கின்மையான நடத்தை எனக் கருதப்பட்டால், விமான விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விமானத்திற்குள் இயர்போன் இல்லாமல் மொபைல் போன் அல்லது வேறு மின்னணு சாதனங்கள் மூலம் சத்தமாக இசை ஒலிக்க விடுவது, பயணிகளின் அமைதியையும் விமான ஒழுங்கையும் பாதித்தால், அது ஒழுங்கற்ற நடத்தை எனக் கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
நேற்று, நாமக்கல் மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், பதிலளித்தார்.. விமானத்தில் சத்தமாக இசை ஒலிக்க விடுவது, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால், அதற்கு தண்டனை நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் தெரிவித்தார்..
இதற்காக புதிய சட்டம் எதுவும் கொண்டு வரப்படவில்லை என்றும், இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஏற்கனவே வகுத்துள்ள விதிகளின் படியே இத்தகைய சம்பவங்கள் கையாளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
DGCA விதிகள் என்ன சொல்கின்றன?
DGCA, 1937 ஆம் ஆண்டின் விமான விதிகள் அடிப்படையில், சிவில் ஏவியேஷன் தேவைகள் (CAR) என்ற விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள், விமானத்திற்குள் நடைபெறும் சட்டவிரோத அல்லது ஒழுங்கை குலைக்கும் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டவை.
இந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
விதி 22: பயணியை விமானத்தில் ஏற்ற மறுப்பதற்கும், தேவைப்பட்டால் விமானத்திலிருந்து இறக்குவதற்கும் அனுமதி வழங்குகிறது.
விதி 23: விமானத்தின் பாதுகாப்பு அல்லது ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடந்து கொள்பவர்களை, விமானத்தின் பொறுப்பாளரான பைலட்டிற்கு கட்டுப்படுத்த அதிகாரம் வழங்குகிறது.
விதி 29: விமான விதிகளை மீறினால், அதற்கான தண்டனை வழங்கும் பிரிவு.
அதாவது, உங்கள் செயல் பாதுகாப்பையோ அல்லது பிற பயணிகளின் அமைதியையோ பாதித்தால், விமான ஊழியர்கள் மற்றும் விமானி ஆகியோருக்கு நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் உள்ளது.
விமான நிறுவனங்கள் இசை ஒலிக்க விடுவது சரியா?
இதனால் பயணிகள் தேவையற்ற பயத்தில் ஆழ வேண்டாம் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். பல விமான நிறுவனங்களில், பயணிகள் ஏறும் போது மற்றும் இறங்கும் போது, மென்மையான இசை ஒலிக்க விடப்படுவது வழக்கமான நடைமுறையாகும். இது விமான நிறுவனங்களின் சாதாரண செயல்பாட்டு முறை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பயணத்தின் போது, விமான நிறுவனங்கள் வழங்கும் உள்ளமைக்கப்பட்ட பொழுதுபோக்கு அமைப்புகள் (In-flight entertainment systems) மூலம் பாடல்கள், திரைப்படங்கள் போன்றவற்றை பயணிகள் பயன்படுத்த அனுமதி உள்ளது. அதாவது, இசை கேட்க தடை இல்லை.. ஆனால் தனிப்பட்ட ஸ்பீக்கரில் சத்தமாக ஒலிக்க விடுவது மட்டுமே பிரச்சினை.
விமானத்தில் வ்லாகிங் (Vlogging) செய்யலாமா?
இந்த விவாதத்தின் போது, விமானத்திற்குள் வீடியோ எடுப்பது மற்றும் வ்லாகிங் செய்வது குறித்த கேள்வியும் எழுந்தது. இதற்கு அமைச்சர், விமான போக்குவரத்து விதிகளின் 13-வது விதியை குறிப்பிட்டார். இந்த விதியின் படி, DGCA அனுமதி பெற்ற விமான நிலையங்களில் மற்றும் பறக்கும் விமானத்திலிருந்து புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது, முன்கூட்டியே எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
அதனால், ரன்-வே காட்சிகள், விமானத்தின் உள்ளே சினிமா ஸ்டைல் வீடியோக்கள் அல்லது காக்பிட் போல காட்டும் காட்சிகளை எடுக்க நினைப்பவர்கள், முன் அனுமதி பெற வேண்டியது அவசியம்.
புதிய சட்டம் இல்லை
முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இயர்போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் இசை ஒலிக்க விடுவோருக்காக தனியாக புதிய தண்டனை சட்டம் எதையும் அரசு கொண்டு வரவில்லை. ஆனால், அந்த நடத்தை விமானத்தின் ஒழுங்கையும் அமைதியையும் குலைக்கும் அளவுக்கு சென்றால், அது ஏற்கனவே உள்ள ஒழுங்கற்ற பயணிகள் விதிகளின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.
விமானப் பயணம் ஏற்கனவே பலருக்கும் மன அழுத்தமான ஒன்றாக இருக்கிறது – தாமதங்கள், விமான அதிர்வுகள், குழந்தைகளின் அழுகை என பல விஷயங்கள் இருக்கின்றன. இதில் மேலும், மொபைல் போன் சத்தமாக பாடல் ஒலிப்பதை சேர்க்க வேண்டாம் என்பதே அரசின் விளக்கம் ஆகும்.. விமானத்தில் உங்கள் பாடல்களை ரசிக்க விரும்பினால், காதுக்கருவியை பயன்படுத்துங்கள் – அதுவே பாதுகாப்பானதும், அனைவருக்கும் அமைதியான வழியும் கூட…!
Read More : ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்..! இந்த சேவைகள் மார்ச் 1 முதல் கிடைக்காது..! இந்திய ரயில்வே அறிவிப்பு..!



