தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆகமப் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊக்கத்தொகையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த ஊக்கத்தொகை உயர்வு, பாரம்பரியக் கலைகள் மற்றும் ஆகம விதிகளை கற்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊக்கத்தொகை விவரங்கள் :
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மொத்தம் 18 பயிற்சிப் பள்ளிகள் (அர்ச்சகர், ஓதுவார், தவில், நாதஸ்வரப் பள்ளிகள் மற்றும் வேத ஆகம பாடசாலைகள்) செயல்பட்டு வருகின்றன. இங்கு உணவு, உடை மற்றும் உறைவிட வசதிகளுடன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் வகையில், இந்த ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
முழுநேரப் பயிற்சி பெறும் மாணவர்கள் : மாத ஊக்கத்தொகை ரூ. 4,000-லிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பகுதிநேரப் பயிற்சி பெறும் மாணவர்கள் : மாத ஊக்கத்தொகை ரூ. 2,000-லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத்தொகையானது, கடந்த 2022 ஆம் ஆண்டு வரை முழுநேர மாணவர்களுக்கு வெறும் ரூ. 1,000 என வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி மற்றும் தகுதிகள் :
இந்த ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சைவ-வைணவ முறைப்படி தமிழ் மற்றும் ஆகமங்கள் முழுமையாக கற்றுத்தரப்படும். இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேர, மாணவர்கள் இந்து சமய கோட்பாடுகளைப் பின்பற்றுபவராகவும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 14 முதல் 24 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலராகவும் இருக்க வேண்டும்.
பயிற்சிப் பள்ளிகள் மதுரை, திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி (சைவ அர்ச்சகர்), திருவல்லிக்கேணி, ஸ்ரீரங்கம் (வைணவ அர்ச்சகர்) உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலங்களில் செயல்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை அந்தந்தக் கோயில் அலுவலகங்களிலோ அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். தமிழக அரசின் இந்தச் சலுகை, பாரம்பரியக் கலைகளை கற்க அதிக மாணவர்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



