தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களுக்கு இன்று ‘அதி கனமழை’க்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட விடுமுறைக்குப் பின் நாளை பள்ளிகள் திறப்பு..?
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கடந்த வார இறுதியில் இருந்து விடுமுறை விடப்பட்டிருந்தது. அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி கொண்டாடப்பட்டதால், வார விடுமுறையுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. சொந்த ஊர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக இன்று (அக்டோபர் 21) அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதனால் மாணவர்கள் மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவித்தனர்.
இந்நிலையில், நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ள சூழலில், மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சில மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கனமழையால் பள்ளி வளாகங்களில் நீர் தேங்குவது, மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் ஏற்படும் சிரமங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நாளை விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் மழை நிலவரம் மற்றும் பாதிப்புகளைப் பொறுத்து மாவட்ட நிர்வாகம் இன்று இரவுக்குள் விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



