2025-26ஆம் கல்வியாண்டு கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலை, இலக்கியத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா, மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தேதிகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த கல்வியாண்டின் முதல் பருவத் தேர்வாக காலாண்டுத் தேர்வு நடைபெறவுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கற்பிக்கப்பட்ட பாடங்கள் அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களின் அறிவுத்திறனை மதிப்பீடு செய்யும் விதமாக தேர்வுகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளன. முதற்கட்டமாக செப்டம்பர் 18ஆம் தேதி தேர்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வெளியான அறிவிப்பின்படி, 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன.
மேல்நிலைக் கல்வி பெறும் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வு நடைபெறும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தேர்வு நடைபெறும்.
அதேபோல் 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும், 1 முதல் 3ஆம் வகுப்பு வகுப்புகளுக்கு செப்.22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும் காலாண்டு தேர்வு நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதே சமயம், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்திருந்தது. இது கல்விக் கொள்கையின் புதிய வழிமுறைகளை பிரதிபலிக்கிறது. எனவே, இந்தாண்டு 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்பதுடன், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கே பொதுத்தேர்வு கட்டாயமாக இருக்கிறது.
தேர்வுகள் செப்டம்பர் 26ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. அதையடுத்து, மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடுக்கப்படும். இதற்கிடையே, ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய நாள்கள் இடம்பெறுவதால், மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.