சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் பாலியல் புரோக்கர்களை கைது செய்ய காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டதை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்த ஒரு புரோக்கரை நெற்குன்றம் பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர். நெற்குன்றம் கோல்டலன் ஜார்ஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சந்தேகத்திற்கு இடமான வகையில் கல்லூரி மாணவர்கள் பலர் அடிக்கடி வந்து செல்வதாக விபச்சார தடுப்புப் பிரிவு ஆய்வாளர் இராஜலட்சுமிக்குத் தொடர் புகார்கள் வந்தன.
இதையடுத்து, காவல்துறையினர் எட்டியப்பன் தெருவில் உள்ள அந்த வீட்டை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, அந்த வீட்டிற்குத் தொடர்ந்து இளைஞர்கள் வந்து செல்வது உறுதி செய்யப்பட்டது. உடனே காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
சோதனையில், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 55) என்பவர், இரண்டு இளம் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் நடத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், நெற்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், அங்குப் படிக்கும் மாணவர்களைக் குறிவைத்து ராஜா இந்த சட்டவிரோதத் தொழிலை நடத்தி வந்தது தெரியவந்தது.
இதற்காக, இவர் தனியாக ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, இளம் பெண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றி, அதன் மூலம் மாணவர்களை ஈர்த்துப் பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து, பாலியல் புரோக்கர் ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டு, பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.



