உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயல்வெளியில் ஒரு பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் இது பாலியல் வன்கொடுமைக்கு பிறகு நடந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை விசாரணையில் இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியது, ஒரு காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் என்பது அம்பலமாகியுள்ளது.
உயிரிழந்தவர் மஹோபா மாவட்டத்தின் கப்ராய் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த கிரண் தேவி என அடையாளம் காணப்பட்டார். கிரண் தேவி ஒரு சி.ஆர்.பி.எஃப். வீரரை திருமணம் செய்திருந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு அவருக்கும் அவரது கணவர் வினோத் சிங்குக்கும் இடையே குடும்பப் பிரச்சனைகள் காரணமாக அடிக்கடித் தகராறு ஏற்பட்டது. இதனால், கிரண் தனது கணவர் மற்றும் மாமியார் மீது வரதட்சணை கொடுமை வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்குகளின் போது, கிரணுக்கு அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் அங்கித் யாதவ் அறிமுகமானார். நாளடைவில், இந்த நட்பு நெருங்கிய உறவாக மாறியது. சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த கள்ள உறவில், கிரண் அங்கித் யாதவை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார்.
கிரணின் நிர்பந்தம் அதிகமானதால், சப்-இன்ஸ்பெக்டர் அங்கித் யாதவ் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, நவம்பர் 12-ஆம் தேதி, ஒரு சவாரிக்கு அழைத்துச் செல்வதாக கூறி, தனது அறிமுகமான ஒருவரிடமிருந்து காரை எடுத்துக் கொண்டு கிரணுக்கு அழைப்பு விடுத்தார்.
பயணத்தின் போது இருவரும் தனிமையில் இருந்ததாகவும், அப்போது அங்கித் வயாகரா மாத்திரைகளை உட்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில், இருவருக்கும் இடையே ஏதோ ஒரு காரணத்தால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சியில், அங்கித் யாதவ் கிரணை வயலுக்கு அழைத்துச் சென்று, அவரை மூச்சுத்திணற செய்து கொலை செய்துள்ளார்.
கிரணின் உடல் நிர்வாணமாக கிடந்ததால், ஆரம்பத்தில் பாலியல் வன்கொடுமை நடந்ததாக சந்தேகிக்கப்பட்டது. ஆனால், காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் ஏற்பட்ட கோபத்தில் நடந்த கொலையே இது என்று காவல்துறை விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டரான அங்கித் யாதவ் மீது தக்க சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : திருமண காப்பீடு பற்றி தெரியுமா..? என்னென்ன நிகழ்வுகளுக்கு கிளைம் செய்ய முடியும்..?



