“தோல்வி என்பது முடிவு அல்ல… வெற்றிக்கான ஒரு படிக்கட்டு மட்டுமே” என்ற சொல்லுக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறது பார்லே 20-20 பிஸ்கட் கதை. இந்தியாவின் முன்னணி உணவு நிறுவனம் பார்லே, பல முறை தோல்விகளை சந்தித்த பின்னரே இந்த தயாரிப்பு வெற்றியடைந்தது என்பது தெரிய வந்துள்ளது.
1939-இல் பார்லே-ஜி பிஸ்கட் மூலம் பயணத்தைத் தொடங்கிய பார்லே, இன்றும் இந்திய குடும்பங்களின் பிரியமான பிராண்டாக உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பரிச்சியமான பெயர். ஆனால், இதற்கிடையில், போட்டி நிறுவனமான பிரிட்டானியாவின் குட் டே பிஸ்கட், 1987-இல் அறிமுகமானதும், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் பார்லே பல சவால்களை எதிர்கொண்டது.
பிரிட்டானியாவின் குட் டேவுக்கு போட்டியாக, பார்லே ஹைட் அண்ட் சீக் குக்கீஸ், பார்லே குக்கீஸ், க்ரஞ்சி மஞ்சி, கேலக்ஸி குக்கீஸ் போன்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் இவை எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு மக்களின் மனதை கவரவில்லை. இத்தகைய பல தோல்விகளுக்குப் பிறகே, பார்லே உண்மையான வெற்றியை அடைந்தது.
2007 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றிபெற்றது. கிரிக்கெட்டின் புதிய வடிவமான 20-20 நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போது, இந்திய அணிக்கு மும்பையில் நடந்த பிரமாண்ட வரவேற்பை பார்த்துக் கொண்டிருந்த பார்லே மேலதிகாரிகளுக்கு, “20-20 என்ற பெயரில் ஒரு பிஸ்கட் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்?” என்ற யோசனை தோன்றியது.
இந்த யோசனையின் பேரிலேயே “பார்லே 20-20” பிஸ்கட் அறிமுகப்படுத்தப்பட்டது. சில காலத்திலேயே, இது பார்லேவின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக மாறியது. இன்று இந்திய பிஸ்கட் சந்தையில் பார்லே 20-20 தனி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சுவாரஸ்யமான பின்னணிக் கதையை, பார்லே நிறுவனத்தில் மூத்த சந்தைப்படுத்தல் தலைவராக 24 ஆண்டுகள் பணியாற்றிய கிருஷ்ணா ராவ் புத்தர், YouTube பாட்காஸ்ட் “Raw Talks with VK”-ல் பகிர்ந்துள்ளார்.
Read more: வாஸ்துப்படி செடிகளை இந்த திசையில் நட்டால் வீட்டில் பணப் பஞ்சமே இருக்காது..!!