உலக நாடுகள் 2026 புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரும் வேளையில், ஜப்பானில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் நோடா நகருக்கு அருகே புத்தாண்டு பிறப்பதற்கு சற்று முன்பாக, அதாவது இரவு 11.26 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது நோடா நகரின் கிழக்கே 91 கி.மீ தொலைவிலும், பூமிக்கு அடியில் 19.3 கி.மீ ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் கட்டிடங்கள் குலுங்கியதால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் அச்சமடைந்து வீதிகளுக்கு ஓடி வந்தனர். இந்த இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஜப்பானின் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான திபெத்திலும் 3.4 ரிக்டர் அளவில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
புவியியல் ரீதியாக ஜப்பான் நாடு, பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள எரிமலைகள் மற்றும் கடல் அகழிகள் நிறைந்த ‘நெருப்பு வளையம்’ (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக, உலகளவில் ஏற்படும் 6.0 ரிக்டர் அல்லது அதற்கு மேலான நிலநடுக்கங்களில் சுமார் 20 சதவீதம் ஜப்பானிலேயே நிகழ்கின்றன. கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி கூட ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பல துறைமுகங்களில் அலைகள் 70 செ.மீ உயரம் வரை சீறி பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.



