உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 3 சிறுமிகள் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு, சேத்தன் குமாருடன் ‘லிவ்-இன்’ முறையில் வாழ்ந்த பெண் ஒருவர் மொட்டை மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார். அப்போது தற்கொலை என்று முடிக்கப்பட்ட அந்த வழக்கிற்கும், தற்போதைய சிறுமிகளின் மரணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என துணை ஆணையர் நிமிஷ் பாட்டீல் தலைமையிலான குழு விசாரணை நடத்த உள்ளது. தந்தை சேத்தனின் மனநிலை மற்றும் குடும்பப் பின்னணியை ஆராயவே இந்தப் பழைய வழக்கு மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் சேத்தன் குமாரின் குடும்ப சூழல் அதிகாரிகளை திகைக்க வைத்துள்ளது. சுஜாதா, ஹீனா, டீனா ஆகிய 3 சகோதரிகளை திருமணம் செய்துள்ள இவர், அவர்கள் அனைவருடனும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்துள்ளார். இதில் உயிரிழந்த நிஷிகா (16) சுஜாதாவின் மகள்; பிராச்சி (14) மற்றும் பாக்கி (12) ஆகிய இருவரும் ஹீனாவின் மகள்கள் ஆவர்.
பங்குச்சந்தை தரகரான சேத்தன் குமார், சுமார் 2 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்துள்ளார். மின்கட்டணம் செலுத்தக் கூட பணமின்றி மகள்களின் செல்போன்களை விற்றதாக தெரிகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தச் சிறுமிகள் பள்ளிக்கும் செல்லவில்லை.
சிறுமிகள் தற்கொலை செய்த அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 8 பக்க டைரி பல திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமிகள் கொரிய கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குகளில் அதீத ஆர்வம் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. தங்களுக்குக் கொரியப் பெயர்களை சூட்டிக்கொண்ட அவர்கள், ஆன்லைன் வழியாக ஏதோ ஒரு கொரிய விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அந்த விளையாட்டின் தூண்டுதலால் அல்லது அதன் இறுதிப் பகுதியாகவே அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த புதன்கிழமை அதிகாலை, தங்களின் செல்போன்களை பறித்ததற்காக பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே சிறுமிகள் இந்த தீவிர முடிவை எடுத்துள்ளனர். அதிகாலை 2:15 மணியளவில் அடுத்தடுத்து அவர்கள் மாடியிலிருந்து குதித்துள்ளனர். தந்தை மீதான சந்தேகங்கள் ஒருபுறம் இருந்தாலும், சிறுமிகளின் ஆன்லைன் செயல்பாடுகள் குறித்தும் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



