கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 40 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் மத்தியிலேயே திடீர் மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன என்ற அதிர்ச்சித் தகவலை சமீபத்திய ஓர் ஆய்வு தரவுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயறிதல் மற்றும் தடயவியல் துறைகள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் விரிவான முடிவுகள், இந்திய மருத்துவ ஆய்வுகள் இதழில் (ICMR) வெளியாகியுள்ளது.
மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மொத்தம் 2,214 பிரேத பரிசோதனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில், சுமார் 8.1% பேருக்கு திடீர் மரணம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதில் மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால், திடீர் மரணமடைந்தவர்களில் 57.2% பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்தச் சராசரி வயது 33.6 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், திடீர் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாகவே இருந்துள்ளனர்.
திடீர் மரணங்களுக்கு என்ன காரணம்..?
திடீர் மரணங்களில் சுமார் 42.6% மரணங்களுக்கு இதயப் பிரச்சனைகளே முக்கியக் காரணமாக இருந்துள்ளன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, ஏற்கனவே ரத்த அடைப்புடன் கூடிய தீவிர இதயத்தமனி பிரச்சனைகள் இருந்துள்ளன.
அவற்றை முன்கூட்டியே அவர்கள் கவனிக்காததே மரணத்திற்குக் காரணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, 46 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 70% பேருக்கு இந்த கொரனரி இதய பாதிப்புகளால் திடீர் மரணம் நிகழ்ந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான திடீர் மரணங்கள், சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் இருக்கும்போதோ அல்லது பயணத்தின்போதோ, அதிகாலையிலோ அல்லது இரவிலோ நிகழ்ந்துள்ளன. நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், திடீர் சுயநினைவு இழத்தல் ஆகிய அறிகுறிகளுடன் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
திடீர் மரணமடைந்தவர்களில் ஒருசிலருக்கே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நீடித்த நோய்கள் இருந்துள்ளன. ஆனால், பாதிக்கும் மேற்பட்டோருக்கு புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த இளம் வயது மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கோ அல்லது கொரோனா தொற்றுக்கோ நேரடி தொடர்பிருப்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்படவில்லை.
மருத்துவர்களின் பரிந்துரை :
* இதயப் பிரச்சனைகளுக்கான குடும்பப் பின்னணி இருப்பவர்கள், இளம் வயதிலேயே அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.
* எந்தவொரு ஆரம்பகால அறிகுறியையும் அலட்சியம் செய்யக்கூடாது.
* புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை உடனடியாகத் தவிர்க்க வேண்டும்.
* இளம் வயதினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், திடீர் மரணங்களைத் தடுக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மிக அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.



