டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், கார் ஓட்டியதாக கூறப்படும் டாக்டர் உமர் உன் நபி தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், நபி “தற்கொலைப் படை தாக்குதல்” (suicide bombing) என்ற எண்ணம் எப்படி தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் பேசுகிறார்.
நவம்பர் 10க்கு முன் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் அந்த வீடியோவில், உமர் நபி ஒரு அறையில் தனியாக அமர்ந்து தற்கொலைப் படை தாக்குதல் பற்றிப் பேசுகிறார். அங்கு அவர், இத்தகைய தாக்குதல்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் வார்த்தை தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாகவும், அதனால் பல முரண்பாடுகள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன என்றும் கூறுகிறார்.
வீடியோவில் உமர் பேசிய அவர் “மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்துகளில் ஒன்று ‘தற்கொலைப் படை தாக்குதல்’ என்று அழைக்கப்படும் கருத்து. இது உண்மையில் ஒரு தியாகப் பணி. இதற்கு எதிராக பல வாதங்களும் முரண்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தியாகப் பணி என்றால், ஒரு நபர் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் நான் நிச்சயமாக இறப்பேன் என்று கருதி செல்கிறார். அதே நேரத்தில், அந்த இடத்தில் அல்லது சூழ்நிலையில் யாரோ ஒருவருக்கு மரணம் நேரும் எனும் எண்ணத்தையும் அவர் எதிர்த்து செயலில் ஈடுபடுகிறார். அவர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும், ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் மரணம் நிச்சயம் என்று எண்ணிக்கொண்டு செல்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்..
இந்த வீடியோ, தேசிய விசாரணை முகமை (NIA) டெல்லி தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை கைது செய்த ஒரு நாளுக்குப் பிறகே வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் ஜாசிர் பிலால் வாசி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முன்னதாக உமர் அவரை “மூளைச் சலவை” செய்து, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த தற்கொலைப்படை தாக்குதல்களைத் திட்டமிட தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உமர் உன் நபியை முதன்முறையாக “தற்கொலைப் படை குண்டுதாரி என்று குறிப்பிட்டது.. மேலும் அந்த காரில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்தது என்று தெரிவித்திருந்தது..
விசாரணை அதிகாரிகளின் தகவல்படி, பலமுறை உரிமையாளர் மாறியதும், CNG டேங்க் பொருத்தப்பட்டிருந்த மெதுவாக நகரும் i20 கார், நவம்பர் 10 அன்று மாலை 6:52க்கு ஒரு போக்குவரத்து சிக்னல் அருகே தீப்பிடித்து வெடித்தது. கார் வெடிக்கும் நேரத்தில் ஸ்டியரிங் அருகே இருந்தது உமர் உன் நபிதான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்..
இதனிடையே , டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு, இந்தக் குழுவின் விரிவான சதித் திட்டத்தை ஆராய தனி வழக்கை பதிவு செய்துள்ளது. இதில் வெடிபொருட்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டன, வாகனங்கள் எவ்வாறு திரட்டப்பட்டன, மேலும் 2019 புல்வாமா தாக்குதலை ஒத்த தற்கொலைப் படை தாக்குதலை செயல்படுத்த முயற்சித்தார்களா என்ற விசாரணையும் நடைபெறுகிறது.



