மழைக்காலம் தொடங்கியதும் வீட்டு பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் அதிகரிக்கிறது. குறிப்பாக சமையலறையில் சேமித்து வைக்கப்படும் அரிசி மற்றும் பருப்பு வகைகள் புழுக்கள், வண்டுகள் மற்றும் பூஞ்சை காரணமாக பாதிக்கப்படுவது இல்லத்தரசிகளுக்கு பெரிய சவாலாக மாறுகிறது.
போதிய சூரிய ஒளி இல்லாதது மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக, அரிசி மற்றும் பருப்பு வகைகளில் புழுக்கள் விரைவாக உருவாகின்றன. ஒருமுறை புழுக்கள் வந்துவிட்டால் அவற்றை அகற்றுவது கடினமாக இருக்கும் நிலையில், சில எளிய வீட்டு குறிப்புகள் மூலம் இந்த பிரச்சனையை தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலத்தில் வெயில் கிடைக்கும் நேரங்களில், அரிசி மற்றும் பருப்பு வகைகளை நன்கு உலர்த்த வேண்டும். ஈரப்பதம் நீங்கினால் புழுக்கள் வளராது. ஏற்கனவே புழுக்கள் இருந்தாலும், வெயிலில் உலர்த்துவதன் மூலம் அவை அழிந்துவிடும் என கூறப்படுகிறது.
அரிசி மற்றும் பருப்பு வகைகளை சேமிக்கும் போது, காற்று புகாத கொள்கலன்களை பயன்படுத்துவது அவசியம். மெல்லிய பிளாஸ்டிக் அல்லது சில்வர் கொள்கலன்களில் ஈரப்பதம் எளிதில் சேர்ந்துவிடும் என்பதால், உலர்ந்த இடங்களில் வைத்தல் பாதுகாப்பானதாகும்.
பருப்பு வகைகளை சேமிக்கும் முன் பாத்திரங்கள் முழுமையாக உலர்ந்திருக்க வேண்டும் என்றும், துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசிப்பருப்பு போன்றவற்றில் சிறிதளவு மஞ்சள் சேர்ப்பதன் மூலம் பூச்சிகளைத் தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மஞ்சளின் நறுமணம் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டதாகும்.
மேலும், உலர்ந்த வேப்ப இலைகளை அரிசி மற்றும் பருப்பு வைக்கப்படும் கொள்கலன்களில் சேர்த்தால், பூச்சிகள் விலகி இருக்கும். அதுபோல, பூண்டு பற்கள், உலர்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் கிராம்பு போன்றவற்றின் வாசனையும் பூச்சிகளைத் தடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரியாணி இலைகள், உலர்ந்த எலுமிச்சை தோல்கள், எலுமிச்சை புல் ஆகியவற்றையும் பருப்பு வகைகளுடன் சேர்த்து வைத்தால் நீண்ட காலம் அவை பாதுகாப்பாக இருக்கும். கூடுதலாக, தீப்பெட்டிகளில் உள்ள கந்தகத்தின் வாசனை பூச்சிகளை விரட்டும் என்பதால், பருப்பு கொள்கலன்களில் ஒரு தீப்பெட்டியை வைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நிபுணர்கள் கூறுவதப்படி, இவ்வகை இயற்கையான வீட்டு குறிப்புகளை கடைப்பிடிப்பதன் மூலம், மழைக்காலத்தில் அரிசி மற்றும் பருப்பு வகைகளைப் பாதுகாப்பாகவும் நீண்ட காலம் பயன்படுத்தத் தகுந்தவையாகவும் வைத்திருக்க முடியும்.
Read more: இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பொளந்து கட்டும்.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் அலர்ட்..



