குரேஷியா தலைநகரம் ஜாக்ரெப்பில் SuperUnited Rapid and Blitz Croatia 2025 (Zagreb) போட்டியில் இந்தியா வீரர் குகேஷ், மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற கிளாசிக்கல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியனான டிங் லிரேனை வீழ்த்தினார் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது குகேஷ். இதன் மூலம், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த நிலையில், கடந்த மாதம் தொடக்கத்தில் நார்வேயில் நடைபெற்ற செஸ் தொடரின் போது குகேஷின் ஆட்டத் திறன் பற்றி கார்ல்சன் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால், அந்த தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார் குகேஷ். குகேஷிடம் முதன்முறையாக தோல்வியடைந்த கார்ல்சன், விரக்தியில் டேபிளை குத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 தொடர் கொண்ட போட்டிகளில் இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடைபெறுகிறது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்றனர். முதலில் ‘ரேபிட்’ முறையில் போட்டி நடைபெற்றது.
முதல் நாளில் 3 சுற்றுகள் நடந்தன. முதல் சுற்றில் குகேஷ், போலந்தின் ஜான் டுடாவிடம் தோல்வியடைந்தார். பின் சுதாரித்த குகேஷ், அடுத்த சுற்றில் பிரான்சின் அலிரேசாவை வென்றார். 3வது சுற்றில் குகேஷ் – பிரக்ஞானந்தா மோதினர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் 3 சுற்று முடிவில் கார்ல்சன் (4.0), ஜான் டுடா (4.0), அமெரிக்காவின் வெஸ்லே (4.0), குகேஷ் (4.0) ஆகியோர் ‘டாப்-4’ இடங்களில் உள்ளனர். முதல் இரு சுற்றில் ‘டிரா’ செய்த பிரக்ஞானந்தா (2.0) கடைசி இடத்தில் (10) இருந்தனர்.
இந்தநிலையில், குரேஷியா தலைநகரம் ஜாக்ரெப்பில் நடைபெற்ற SuperUnited Rapid and Blitz Croatia 2025 (Zagreb) போட்டியில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்துள்ளார். இரண்டாவது நாளின் முடிவில் குகேஷ் 10 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். 8 புள்ளிகளுடன் Jan-Krzysztof Duda 2வது இடத்திலும், மாக்னஸ் கார்ல்சன் 6 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
மாக்னஸ் கார்ல்சன், ரேபிட் ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தினார் மற்றும் குகேஷ் மீது தாக்குதலுக்கான இடைவெளிகளை உருவாக்க முயற்சித்தார். இருப்பினும், b சிப்பாயை b4-க்கு முன்னேற்றும் தவறான முடிவை எடுத்ததால், விளையாட்டு முழுமையாக குகேஷின் பக்கம் சாய்ந்தது. அந்த தருணத்திலிருந்து குகேஷ் கட்டுப்பாட்டை கைப்பற்றி, கார்ல்சனை பின்னோக்கி தள்ளி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். கடைசி 30 வினாடிகளில் தோல்வியை உணர்ந்த கார்ல்சன், அதிக உணர்ச்சிகளைக் காட்டாமலும், கண்களைப் பார்க்காமலும் குகேஷின் கையை குலுக்கினார்.
இது குகேஷிடம் கார்ல்சன் இழந்த இரண்டாவது தோல்வி மட்டுமல்ல, இது ஒரு தெளிவான, நிறைவான தோல்வி,” என்று முன்னாள் உலக சாம்பியன் காரி காஸ்பரோவ் தெரிவித்தார்.தனது சிப்பாயை b4 க்கு நகர்த்தும் கார்ல்சனின் முடிவில் ஈர்க்கப்படவில்லை என்று வர்ணனையாளரான காஸ்பரோவ் தெரிவித்தார்.
ஆட்டத்திற்கு பின் பேசிய குகேஷ், “மேக்னஸை வீழ்த்துவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது, இது இன்னும் கொஞ்சம் நம்பிக்கையைத் தருகிறது. எனக்கு ஒரு பயங்கரமான தொடக்கம் கிடைத்தது” என்று கூறினார்.