பிரேசிலில் ஜிரோலாண்டோ இனத்தை சேர்ந்த பசு, மூன்றே நாட்களில் 343 லிட்டர் பால் உற்பத்தி செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
பிரேசிலின் ஜிரோலாண்டோ பசு இனம், ஹோல்ஸ்டீன் மற்றும் கிர் கால்நடைகளின் கலப்பினமாகும், இது நம்பமுடியாத அளவிற்கு அதிக பால் உற்பத்திக்கு நீண்ட காலமாக பிரபலமானது. ஜிரோலாண்டோ சராசரியாக 305 நாள் பாலூட்டும் காலத்திற்கு 3,600 லிட்டர் (950 கேலன்) பால் தருகிறது, ஆனால் சில பசுக்கள் ஒரு நாளைக்கு 100 லிட்டருக்கு (26.4 கேலன்) மேல் உற்பத்தி செய்ய முடியும். தென் அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்ட இனமான ஜிரோலாண்டோஸை சாதனை படைக்கும் வகையில் வைத்திருப்பதில் பிரேசிலிய கால்நடை விவசாயிகள் மிகவும் பெருமைப்படுகிறார்கள்.
அந்தவகையில், சமீபத்தில் தெற்கு மினாஸ் ஜெரைஸின் டெல்ஃபிம் மொரேராவில் நடந்த ஒரு போட்டியின் போது, ஜிரோலாண்டோ பசு மூன்று நாட்களில் 343 லிட்டர் பால் உற்பத்தி செய்து புதிய சாதனையை படைத்தது. பிரேசிலிய ஊடகங்கள் பசுவின் பெயர்களையும் அதன் உரிமையாளரின் பெயர்களையும் வெளியிடவில்லை என்றாலும், அந்த பசு ஒரே நாளில் 120 லிட்டர் பால் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. இது தினசரி பால் உற்பத்திக்கான கின்னஸ் உலக சாதனைக்கு அருகில் உள்ளது. ஆகஸ்ட் 3, 2019 அன்று, மற்றொரு ஜிரோலாண்டோ பசு, மரிலியா எஃப்ஐவி டீட்ரோ டி நெய்லோ, தினசரி பால் உற்பத்திக்கான உலக சாதனையை 127.6 லிட்டர் பாலுடன் படைத்தது. இதன் விளைவாக ஜிரோலாண்டோ இனம் தற்போது மிகவும் உற்பத்தி செய்யும் பசு இனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற போட்டிகளுக்கு விவசாயிகள் தங்கள் கால்நடைகளைத் தயார் படுத்த பல மாதங்கள் செலவிடுகின்றனர். பாலை அதிகரிக்கச் செய்ய அவர்களின் உணவில் கூடுதலான ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்வரை, இத்தகைய போட்டிகளில் ஸ்டீராய்டுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிற பொருட்களின் பயன்படுத்தல் சாதாரணமாக இருந்தது. ஆனால், புதிய விதிமுறைகள் அறிமுகமாகியதுடன், பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டன. அத்துடன் போட்டியின் முதல் பால் கறப்பதற்கு குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பே பசுக்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதும் விதிமுறையாக அமைந்தது. மேலும், ஒரு நாளில் மூன்று முறை பால் கறத்தல்களுக்கு இடையிலான இடைவெளி எட்டு மணிநேரமாகவும் நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.