பொள்ளாச்சி அருகே மனைவி மீது ஏற்பட்ட நடத்தை சந்தேகத்தால் கணவன் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மரபேட்டை வீதியைச் சேர்ந்த பாரதி (29) பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஸ்வேதா (26). இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர், கடந்த ஒரு மாத காலமாக கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
பாரதிக்கு, தனது மனைவி ஸ்வேதாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருந்துள்ளது. இதன் காரணமாக, ஸ்வேதா தனது குழந்தைகளுடன் பழனியப்பன் வீதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை, ஸ்வேதா வழக்கம் போல திருநீலகண்டர் வீதியில் உள்ள தனது பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வழிமறித்த அவரது கணவர் பாரதி, ஸ்வேதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், பாரதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஸ்வேதாவின் உடலில் சரமாரியாக பல இடங்களில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஸ்வேதா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நடுரோட்டில் நடந்த இந்த கொடூரக் கொலையைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பாரதியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஸ்வேதாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Read More : இதை மட்டும் மாற்றினால் உடனே 3 கிலோ வரை உடல் எடை குறையும்..!! செம ரிசல்ட்..!! டிரை பண்ணி பாருங்க..!!