கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடங்கியது.
கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த முறை விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரியில்லாமல் நிராகரிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களில் திருமணமான பெண்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தமிழகத்தில் விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில் முதன் முதலில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் எஸ்எம்எஸ் மூலம் பதிலளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை தொடர்பான தகவல்களை விண்ணப்பதாரர்கள் https://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாக அறிந்து கொள்ளலாம். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டும் 15 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.