இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் களம் கண்ட பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஜிம்பாப்வே அணி ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கொழும்புவில் நடைபெற்ற இந்த ‘பி’ பிரிவு ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டிங் வரிசையைத் தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் நிலைகுலையச் செய்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேயின் அதிரடி பேட்டிங் :
முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ட்ராவிஸ் ஹெட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்குத் தொடக்க வீரர்களான பென்னெட் மற்றும் மருமணி ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. மருமணி 35 ரன்களில் வெளியேறினாலும், மறுபுறம் நங்கூரம் பாய்ச்சி ஆடிய பென்னெட் அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்குத் துணையாக ரியான் புரி 35 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டொய்னிஸ் மற்றும் கிரீன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
சரிந்த ஆஸ்திரேலியாவின் கோட்டை :
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஆஸ்திரேலியாவிற்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் ஜோஸ் இங்க்லிஷ் (8), கேப்டன் ஹெட் (17), கேமரூன் கிரீன் (0) மற்றும் டிம் டேவிட் (0) என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 31 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் சிறிது நேரம் நம்பிக்கையளித்தாலும், அவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மேத்யூ ரென்ஷா தனி ஆளாக போராடி அரைசதம் கடந்து 65 ரன்கள் குவித்தார். ஆனால், மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது.
முசரபானியின் மேஜிக் பந்துவீச்சு :
ஜிம்பாப்வே அணியின் இந்த வரலாற்று வெற்றிக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானி முக்கியக் காரணமாக அமைந்தார். துல்லியமாகப் பந்துவீசிய அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை நிலைகுலைய செய்தார். அவருக்கு உறுதுணையாக பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். உலக கோப்பை தொடரின் தொடக்கத்திலேயே பலமான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருப்பதன் மூலம், ஜிம்பாப்வே அணி சூப்பர்-8 சுற்றுக்கான வாய்ப்பில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தோல்வி ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
Read More : பிரதமர் அலுவலகத்தின் புதிய வளாகமான ‘சேவா தீர்த்தம்’.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!



