அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.
மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள 17 அம்சக் கோரிக்கைகளில், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதைக் கைவிடுதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல், தொழிலாளர் சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறுதல் போன்ற பல முக்கிய அம்சங்கள் அடங்கும். இக்கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே நாளை நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாரும் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டால் NO WORK – NO PAY என்ற அடிப்படையில் ஊதியப்படுத்தும் செய்யப்படும் என்று கூறியுள்ளார். மேலும், பகுதி நேர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.