ஐபிஎல் போட்டிகளில் இனி விளையாடப்போவதில்லை என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2009 முதல் 2015 வரை சென்னை அணிக்காக விளையாடிய அஸ்வின், பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்தார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து 9.75 கோடி ரூபாய்க்கு தனது முதல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அஸ்வின் திரும்பினார்.
ஐபிஎல் தொடருக்குப் பிறகு தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடிய அஸ்வின் மீது பந்துவீச்சில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அது தவறு என்று பின்னர் தெரியவந்தது. இந்த நிலையில் தான் ஐபிஎல் போட்டிகளில் இனி விளையாடப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று சிறப்பான நாள், அதனால் ஒரு சிறப்பு ஆரம்பம். ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும். ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது. இனி ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் என்னை பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் “கடந்த பல ஆண்டுகளாக அற்புதமான நினைவுகள் மற்றும் ஆதரவு வழங்கிய உறவுகளுக்கும், மிக முக்கியமாக IPL மற்றும் BCCI-க்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் இருப்பதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என கூறியுள்ளார்.
அவர், அடுத்த மாதம் நடைபெற உள்ள SA20 மற்றும் ILT20 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் உலகின் பிற பிரபலமான டி20 லீக்குகளில் விளையாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கப்போவதாக ஊகிக்கப்படுகிறது.