மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று பிஎம் கிசான் திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், 21-வது தவணை விரைவில் வெளியாகவுள்ளது.
மத்திய அரசின் கடுமையான எச்சரிக்கையின்படி, இம்முறை கேஒய்சி (KYC) செயல்முறையை முடிக்காத விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதி கிடைக்காது என்பதுடன், அவர்கள் இத்திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் கட்டாயம் தங்களது நில உடைமை ஆவணங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்து, விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் (Farmer ID) பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அடையாள எண் பெறாவிட்டால் என்ன ஆகும்..?
விவசாயிகளுக்கான அடையாள எண் என்பது, மத்திய அரசு வழங்கும் பிஎம் கிசான் நிதி சரியான பயனாளிகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்வதற்காக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் இந்த அடையாள எண்ணைப் பெறாவிட்டால், பிஎம் கிசான் திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள்.
வருங்காலங்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை மூலமாகச் செயல்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டப் பயன்களையும் பெற முடியாமல் போகும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை இதுவரை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யவில்லை என்றால், உடனடியாக அதைச் செய்து அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையத்துக்குச் சென்று ஆதார் எண், கைபேசி எண், நில ஆவணங்கள், வங்கிக் கணக்குப் புத்தகம் போன்ற ஆவணங்களைக் கொடுத்து விண்ணப்பிக்கலாம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டும் நில உடைமை ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, விவசாயிகளுக்கான அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.



