தமிழகத்தில் நோய் வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கால்நடைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் இந்த கருணை கொலை செய்யப்பட வேண்டும் என்றும், கருணை கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான வழிகாட்டு நடைமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கொள்கையும் தமிழக அரசு சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, தெரு நாய்களால் பரவும் ரேபிஸ் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2022-ல் 3,65,318 ஆக இருந்த நாய்க்கடி சம்பவங்கள் 2023-ல் 4,40,921 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதில் குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கேரளாவிலும் இதேபோன்று நோய் பாதித்த தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலப்புரம் போன்ற பகுதிகளில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read more: Flash: தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. நீலாங்கரையில் பரபரப்பு..!!