தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மக்களின் சமூகப் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநில அரசு மிக முக்கியமான அரசாணையை (எண்: 105) வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் எதிர்பாராமல் நிகழும் உயிரிழப்பின் போது, அந்த ஏழை குடும்பம் இறுதிச் சடங்குகளை செய்யக்கூட கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
கடந்த 2012-13 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த ரூ.2,500 நிதியுதவி, தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சுமார் ரூ.4.97 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பலன் தகுதியுள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், வருமான வரம்பிலும் அரசு தாராளமான மாற்றங்களை செய்துள்ளது.
முன்னதாக கிராமப்புறங்களில் ரூ.40,000 என்றும், நகர்ப்புறங்களில் ரூ.60,000 என்றும் இருந்த ஆண்டு வருமான வரம்பு, தற்போது இரு பிரிவினருக்கும் பொதுவான ஒரு அளவுகோலாக ரூ.72,000 என உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்குச் சுமார் 19,900 குடும்பங்கள் கூடுதலாகப் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கி கணக்கிலேயே (DBT முறை) செலுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், உயிரிழப்பு ஏற்பட்டவுடன் காலதாமதம் செய்யாமல் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, இறப்புச் சான்றிதழ், வட்டாட்சியர் வழங்கிய வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO) அல்லது நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்கலாம்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள எளிய மக்கள் இக்கட்டான சூழலில் யாரிடமும் கையேந்தாமல் இருக்க, அரசு வழங்கும் இந்த நிதியுதவி ஒரு தார்மீக அரணாக திகழ்கிறது. அரசுப் பணியில் இருந்தவர்கள் அல்லது வசதி படைத்தவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More : தங்கத்தை போல வெள்ளி நகைகளுக்கு வங்கி கடன் கிடைக்காதது ஏன்..? இதுதான் காரணமா..?



