தமிழ்நாடு அரசு, சுய தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் 3 முக்கியத் திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் சுயதொழில் தொடங்குவதற்கான மானியம், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெறும் வசதி ஆகியவை அடங்கும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் விதமாக, நவீன சலவையகம் அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.5 லட்சம் மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற 5 நபர்கள் கொண்ட குழுவாகச் செயல்பட வேண்டும்.
குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இரண்டு இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. வீடு முதல் வணிக வளாகம் வரையிலான முழுமையான வயரிங் பயிற்சி மற்றும் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் பயிற்சி ஆகிய இரண்டும் தலா 30 நாட்கள் நடைபெறும். இதற்கான நேர்காணல் 22.10.2025 மற்றும் 23.10.2025 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சியில் உள்ள பயிற்சி நிறுவன முகவரியில் நடைபெறுகிறது. 18 முதல் 45 வயதுடைய, குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சி காலத்தில் மதிய உணவு, தேநீர், வங்கி கடன் ஆலோசனை மற்றும் மத்திய ஊரக வளர்ச்சி துறையின் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதேபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைக்கப்பட உள்ளது. இந்த உணவகத்தை நடத்த தகுதியுடைய மகளிர் சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள் அல்லது தொகுப்புகள் விண்ணப்பிக்கலாம். மருத்துவமனையில் இருந்து 5 முதல் 8 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஊராட்சிகளைச் சேர்ந்த குழுக்களுக்கு மட்டுமே அனுமதி. விண்ணப்பிக்கும் குழுக்கள் ‘A’ அல்லது ‘B’ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும்.
மேலும், உணவகம் அமைத்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ள குழுக்கள் தங்கள் விண்ணப்பங்களை 22.10.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : கடன் பிரச்சனை, தொடர் தோல்விகள்..!! வாழ்க்கையை மாற்றும் வாராகி அம்மன் வழிபாடு..!! இந்த நாளை மறந்துறாதீங்க..!!



