தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக நீண்ட காலமாக இடம் பிடித்து வரும் நடிகர் அஜித் குமார், இப்போது திரையுலகை தாண்டி கார் பந்தய உலகிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். கடந்த ஆண்டு, அவர் தொடங்கிய ‘அஜித் குமார் ரேஸிங்’ நிறுவனம் தற்போது சர்வதேச கார் பந்தயங்களிலும், பல்வேறு பட்டங்களில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வருகிறது.
நிறுவனம் தொடங்கிய ஓராண்டில், துபாய் 24H endurance, இத்தாலியின் Mugello 12H ரேஸ் உள்ளிட்ட போட்டிகளில் நடிகர் அஜித்தின் கார் ரேஸ் நிறுவனம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. போர்ச்சுக்கல், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் அஜித்குமார் ரேசிங் நிறுவனம் பங்கேற்று வருகிறது.
இந்த நிலையில், அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரரும், இந்தியாவின் முதல் எப் 1 வீரருமான நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அஜித்குமார் ரேஸிங் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நரேன் எங்களது அணியில் இணைவது உண்மையிலேயே பாக்கியம். அவருடன் இணைந்து பந்தயத்தில் ஈடுபடுவது கவுரவமானது. நரேனுடன் சேர்ந்து ‘ஆசிய லீ மான்ஸ்’ தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தனக்கு அஜித்குமாரை பல ஆண்டுகளாக தெரியும் என்றும், அவருடன் தொழில்முறை கார் பந்தயத்தில் இணைந்து பயணிப்பது என்பது மகிழ்ச்சியானது என நரேன் கார்த்திகேயன் கூறியுள்ளார். வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்குமார் ரேசிங் நிறுவனத்துக்காக நரேன் கார்த்திகேயன் களம் இறங்குகிறார்.
இந்தியாவின் முதல் எப் 1 வீரரான நரேன் கார்த்திகேயன் உலகளவில் ஃபார்முலா ஆசியா, சூப்பர் பிக்ஸ் கொரியா போன்ற பல கார் பந்தயங்களில் முதலிடம் பெற்று இந்தியாவின் கார் பந்தைய நட்சத்திரமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read more: “இந்தியாவிற்கே சென்று விடு” 6 வயது சிறுமி மீது சைக்கிள் ஏற்றி கொடூர தாக்குதல்..!! பகீர் பின்னணி..