சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கின்றனர்.. மேலும் துணை முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.. பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.. மேலும் சிவகார்த்திகேயன், சிவகுமார், மிஷ்கின் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களின் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ இங்கு பேசிய மாணவர்களின் பேச்சை கேட்க கேட்க நான் எமோஷனல் ஆயிட்டேன். உங்கள் கருத்துகளையும் ஃபீட்பேக்கையும் கேட்கும் போது பெருமைப்படுகிறேன். தமிழ்நாடு எந்தளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று இங்கு எல்லோரும் பேசினார். இந்த நிகழ்ச்சியை நடத்த முக்கிய காரணம், எங்களை பாராட்டிக் கொள்ள அல்ல.. அடுத்த பேட்ச் மாணவர்களும் உங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆவார்கள்..
நமது அரசின் மகளிர் பயணம் திட்டம் போலவே, தெலங்கானாவிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.. அதே போல் தெலங்கானாவில் செயல்படுத்தப்படும் நல்ல திட்டங்களை நாங்களும் செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.. இது தான் ஆரோக்கியமான அரசியல்.. நான் தெலங்கானா முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்கள் படிப்பதால் அடுத்த தலைமுறையும் முன்னேறப்போகுது. குடும்பங்கள் முன்னேறினால் மாநிலங்கள் முன்னேறும்.. மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும்.. அதனால் தான் கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லி வருகிறோம்.. திராவிட இயக்கம் நடத்திய புரட்சி தான் கல்வி இந்தளவுக்கு வளர்ந்துள்ளது.. அது தான் படிப்படியாக வளர்ந்து திராவிட அரசு கொண்டு வந்த காலை உணவு திட்டம் வரை நீண்டுள்ளது. இலவச பஸ் பாஸ் திட்டத்தை அன்றைய முதல்வர் கலைஞர் அறிமுகம் செய்தார். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணம் இல்லை என்று சொன்னார்.. இப்படி ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நமது கல்விப்பயணம்.. இந்த பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துளோம்.
பெண்கள் உயர்கல்வியில் சேருவது அதிகளவு முன்னேற்றம் அடைந்திருக்கு. இன்று கல்வியில் தமிழ்நாடு பெற்றிருக்கும் எழுச்சியை இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்கள் திரும்பி பார்க்குது.. இந்த எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கல்விக்கு தடையை ஏற்படுத்த ஒன்றியத்தில் நினைக்கிறார்கள்.. அவர்களுக்கு பயத்தை வரவழைக்கணும்.. நிச்சயம் நமது திட்டங்களாலும் உங்களுடைய சாதனையாலும் அது நடக்கும்.. அனைவருக்கும் கல்வி தான் எனது இலக்கு.. மாணவர்கள் அரசு உருவாக்கி தரும் வாய்ப்புகளை பயன்படுத்தி உயர உயர பறக்கணும்.. அதனை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். உங்கள் வெற்றி எல்லா திசைகளிலும் செல்ல வேண்டும். உங்கள் படிப்புக்கு துணையாக உங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இந்த ஸ்டாலின் இருக்கிறேன்.. கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கல்வியில் உயர்ந்த தமிழ்நாடாக மாற வேண்டும்.. மாறும்.. நிச்சயம் மாற்றுவோம்..” என்று தெரிவித்தார்.



