பொதுவாக, சிவன் கோயில்கள் அனைத்திலும் வருடத்தில் ஒரே ஒரு முறை, அதாவது ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் மட்டுமே சிவலிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு சிவாலயத்தில் மட்டும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த சிறப்புக்குரிய ஆலயம் தான் திருவாரூரில் அமைந்துள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் ஆகும்.
அமாவாசை அன்னாபிஷேகத்தின் சிறப்பு :
திருவாரூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள விளமல் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது மிகவும் விசேஷமானதாகும். தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்கு சிவனுக்கு அன்னம் படைத்து வழிபடுகின்றனர்.
இந்த ஆலயத்தில் உள்ள தீர்த்தம் ‘அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. முன்னோர்களுக்கு முறையாகத் திதி, தர்ப்பணம் செய்யத் தவறியவர்கள் அமாவாசை நாளில் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி, பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, முன்னோர்கள் மோட்சம் பெறுவதற்காக மோட்ச தீபம் ஏற்றுகின்றனர். அமாவாசையில் இங்கே விளக்கேற்றி வழிபட்டால், முன்னோர்கள் மகிழ்ந்து தலைமுறை சிறக்க ஆசி வழங்குவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத ஐதீகம்.
சிவனின் திருவடி தரிசனம் :
இக்கோயில் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத முனிவர் ஆகியோர் வழிபட்ட மிகத் தொன்மையான தலமாகும். வியாக்ரபாதர் புலிக்கால்களுடனும், பதஞ்சலி முனிவர் பாம்பின் உடலுடனும் இத்தலத்து அம்மன் கமலாம்பாளை வணங்கி, மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டனர். அவர்களுக்குக் காட்சி தந்த சிவபெருமான், தனது அஜபா நடனத்தையும், திருவடி தரிசனத்தையும் (ருத்ரபாதம்) காட்டி அருளினார். ‘விளமல்’ என்றால் திருவடி என்று பொருள். நடனமாடி திருவடி காட்டிய தலம் என்பதால் இது விளமல் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் சிவனின் அந்த ருத்ரபாதத்திற்குத் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மூலஸ்தானத்தில் லிங்கம், பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் எனச் சிவனின் மூன்று வடிவங்களை ஒரே சன்னிதியில் இங்கு தரிசிக்க முடியும்.
தனித்துவமான அற்புதங்கள் :
விளமல் பதஞ்சலி மனோகரர் ஆலயத்தில் வேறு எங்கும் காண முடியாத அரிய அம்சங்கள் பல உள்ளன. இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் முன்பு தீப வழிபாடு நடக்கும்போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீப ஜோதியாகத் தெரியும் அற்புதம் நிகழ்கிறது.
இத்தலத்தில் அம்மன் மதுரபாஷிணி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 34 நலன்களைத் தரும் தேவியாக விளங்கும் இவர், ஞானம் மற்றும் கல்விக்குரிய வித்யா பீடமாகவும் கருதப்படுகிறார். இப்பகுதி மக்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன், அம்மனுக்குத் தேன் அபிஷேகம் செய்து, அந்தத் தேனைக் குழந்தையின் நாவில் தடவிப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. திக்குவாய் பிரச்சனை உள்ளவர்களும் இந்த அம்மனை வேண்டினால் குணமாகும் என்பது நம்பிக்கை.
ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள எட்டு கைகள் கொண்ட துர்க்கையை வழிபடுவது சிறப்பானது. சிவன் திருவடி காட்டி அருளிய தலம் என்பதால் இங்கு நவகிரகங்களுக்குத் தனிச் சன்னதி கிடையாது. மேலும், தலை திருப்பிய நந்தி, விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி, எம சண்டிகேஸ்வரர், இரண்டு ஐராவதங்களுக்கு நடுவில் காட்சி தரும் மகாலட்சுமி எனப் பல அரிய திருக்காட்சிகளையும் இக்கோயிலில் தரிசிக்கலாம்.
தீராத நோயால் அவதிப்படுபவர்கள் அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பதால், இந்த ஆலயம் பக்தர்களிடையே பெரும் புகழ்பெற்று விளங்குகிறது.



