தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முழக்கங்கள் இப்போதே தனிநபர் விமர்சனங்களாகவும், காரசாரமான விவாதங்களாகவும் உருவெடுத்துள்ளன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது தீவிர தொண்டர்களின் செயல்பாடுகள் குறித்து, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசியபோது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் பயணம் எத்தகைய திசையை நோக்கிச் செல்கிறது என்பது புரியாத புதிராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தவெக ஆதரவாளர்கள் சிலரின் அண்மைய பேச்சுகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார். விஜய்க்கு வாக்களிக்கவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்களுக்கே விஷம் வைத்து விடுவோம் என்று சில ரசிகர்கள் பேசுவது அரைவேக்காட்டுத்தனமானது. இத்தகைய முதிர்ச்சியற்ற நபர்களின் கையில் ஆட்சி அதிகாரம் சென்றால், தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், “ரசிகர்கள் நாட்டுக்காகவோ அல்லது மண்ணின் உரிமைக்காகவோ போராடி உயிர் கொடுப்பதாக சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால், மாற்றுக் கருத்துடைய சொந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கே விஷம் வைப்போம் என்று பெண்கள் பேசுவது சமூகத்தில் ஒருவிதமான பயத்தை உண்டாக்கியுள்ளது” என்று கருணாஸ் சாடினார். வீட்டில் பெண்கள் சமைக்கும்போது எதையாவது கலந்து கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் இப்போது ஆண்களிடையே எழுந்துள்ளதாகவும், இத்தகைய தீவிர ரசிகர் மனநிலையை விஜய் கட்டுப்படுத்த தவறுவது ஏன் என்றும் வினவினார்.



