ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ள சிக்னஸ் என்ற தனியார் மருத்துவமனையில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு, அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் நோயாளிக்கு, இரவு நேரத்தில் மருத்துவமனை ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் ஆஷிஷை கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, தகவல் அறிந்து வந்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட ஆஷிஷை கைது செய்தனர்.
பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த துணை கண்காணிப்பாளர் குர்விந்தர் சிங், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடமும், மருத்துவமனை நிர்வாகத்திடமும், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சமீபத்தில் பிரசவத்தின்போது குழந்தை இறந்துவிட்டதாகவும், அவர் இன்னும் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன் பொது மேலாளர் சுரேந்திர கெண்டல் கூறுகையில், “எங்கள் மருத்துவமனை குற்றவாளிகளை ஒருபோதும் ஆதரிக்காது. சம்பவம் தெரியவந்த உடனேயே போலீசுக்கு தகவல் கொடுத்தோம். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.