உலக அளவில் இருசக்கர வாகன சந்தையில் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்கள். தினமும் உயர்ந்து வரும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச் சூழல் காரணிகளால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்களின் கட்டாயம் அதிகரித்துள்ளது. அதனால் தான் கார் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு வாடிக்கையாளர்களும் எலெக்ட்ரிக் பைக் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முன்னனி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே பல ரகங்களில் வாகனங்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் புதிய புதிய மாடல்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இந்திய சாலைகளை அலங்கரிக்க புதிய எலக்ட்ரிக் பைக் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது இந்திய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று. அந்த பைக் ஒரே சார்ஜில் 135 கிலோ மீட்டர் வரை செல்லும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான ப்யூர் இவி என்ற நிறுவனம் தான் இந்த புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

எக்கோ ட்ரிஃப்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பைக்குகள் சோதனை ஓட்டத்தை முடித்துக்கொண்டு மார்க்கெட் வர தயாராக உள்ளன. இந்தியாவில் உள்ள முன்னனி டீலர்களின் ஷோ ரூம்களில் இந்த பைக்குகள் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. புளூ, சிவப்பு, கருப்பு மற்றும் கிரே என நான்கு வண்ணங்களில் கிடைக்கும் இந்த பைக்குகளின் விலை விவரம் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. ஆங்குலர் டைப் ஹெட்லாம்ப், ஒற்றை இருக்கை மற்றம் அலாய் வீல்களுடன் இந்த பைக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. AIS 156 தரச்சான்று பெற்ற 3.0 KW திறன் கொண்ட பேட்டரி இந்த பைக்கில் உள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 135 கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். ஏற்கனவே இந்த நிறுவனம் இ-ட்ரிஸ்ட் 350 என்ற பெயரில் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரித்து சந்தைப்படுத்தி வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புதிய எக்கோ ட்ரிஃப்ட் பைக்குகளும் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது ப்யூர் இவி நிறுவனம். இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஏற்கனவே தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.