பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான தேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஜூன் மாத புள்ளி விவரங்களின்படி பஜாஜ் ஆட்டோவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான சேட்டக்கின், (Chetak EV) உள்நாட்டு விற்பனை FY23-ல் சுமார் நான்கு மடங்கு அதிகரித்து 36,260 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கைப்படி, FY22-ல் (2021-22) சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 8,187 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. 2023 நிதியாண்டின் முதல் காலாண்டு வரை தொழில்துறையை பாதித்த உலகளாவிய செமிகண்டக்டர் பற்றாக்குறை சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் தேவை இருந்த போதிலும், 2023 நிதியாண்டின் முதல் காலாண்டின் இறுதி வரை தங்களால் தேவையான யூனிட்ஸ்களை உற்பத்தி செய்ய முடியவில்லை என வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, சப்ளை சிக்கல்கள் படிப்படியாக குறைந்ததால் Chetak EV-யின் உற்பத்தி அதிகரித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பஜாஜின் புகழ்பெற்ற வாகனமான சேட்டக் கடந்த 2020-21இல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச் 2021-ல் முடிவடைந்த நிதியாண்டில் உள்நாட்டு சந்தையில் Chetak EV விற்பனை வெறும் 1,395 யூனிட்ஸ்களாகவே இருந்தது.
ஷேர்ஹோல்டர்களுக்கான தனது அறிக்கையில் பஜாஜ் ஆட்டோ நிறுவன தலைவர் நிரஜ் பஜாஜ், FY22-ல் செமி கண்டக்டர்ஸ் பற்றாக்குறையானது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சேட்டக் போன்ற உயர்மட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை பாதித்ததாக நினைவு கூர்ந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக 2023 நிதியாண்டின் முதல் காலாண்டின் இறுதியில் கடுமையாக நிலவிவந்த விநியோக பற்றாக்குறை முடிவுக்கு வந்தது.’
FY22-ல் பஜாஜ் ஆட்டோவின் நெட் சேல்ஸில் 52.7% பங்கைக் கொண்டிருந்த நிறுவனத்தின் ஏற்றுமதிகள், FY23-ல் அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் குறைந்திருப்பதையும் நீரஜ் பஜாஜ் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். நைஜீரியா, எகிப்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற பல முக்கிய இறக்குமதி நாடுகளில் நிலவிவரும் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை இதற்கு காரணமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நைஜீரியாவில் பணமதிப்பு நீக்கம், இறக்குமதியாளர்களின் கையிருப்பில் போதுமான அமெரிக்க டாலர்கள் இல்லாதது போன்றவை வெளிநாட்டு விற்பனை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.