ட்விட்டர் நிறுவனத்திடம் கூகுள் இந்தியா கியூட்டாக வேண்டுகோள் விடுக்கும் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்தாலும், அவ்வப்போது சமூக ஊடகங்களில் ஒன்றை ஒன்று சீண்டி குசும்புத்தனம் செய்வது வழக்கம். அது அந்த நிறுவன பயனர்களை ஊக்குவிப்பதோடு மகிழ்ச்சியடைய வைக்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. ட்விட்டர் நிறுவனம், தனது பயனாளர்களின் கோரிக்கையை ஏற்று எடிட் வசதியை வழங்க முடிவெடுத்துள்ளது. அதற்காக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள குறிப்பிட்ட பயனர்களுக்கு அடுத்த மாதம் அனுமதி வழங்கி டெஸ்டிங் செய்ய இருக்கிறது. பயனாளர்கள் சோதனை மூலம், இந்த வசதியால் ஏற்படும் சிரமம், இந்த வசதியை மேம்படுத்தும் வழிகள், துஷ்பிரயோக வாய்ப்புகள் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து பின்னர் விரைவாக அனைவருக்கும் கொடுக்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், இதை அறிவிக்கும் ட்விட்டர் பதிவை சுட்டிக்காட்டி, கூகுள் இந்தியாவின் ட்விட்டர் பக்கம் ‘எனக்கும் எடிட் ஆக்ஸஸ் கொடுங்களேன்’ என்று கோரிக்கை விடுத்து ட்வீட் செய்துள்ளது. அதோடு கூடவே விழி பிதுங்கிய எமோஜியையும் போட்டுள்ளது. கியூட்டாக வேண்டுகோள் விடுக்கும் இந்த பதிவு ட்விட்டர் பயனர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.