வாட்ஸ்அப் செயலியின் போட்டியாளரான டெலிகிராம், புதிய அப்டேட்டை ஒன்றை வழங்கி உள்ளது. அதன்படி, ஸ்பாய்லர் எபெக்ட்களுடன் (spoiler effect) மீடியாவை மறைத்தல், உங்கள் சாதனத்தில் இடத்தை சேமிப்பதற்கான புதிய வழிகள், புதிய வரைதல் கருவிகள், பரிந்துரைக்கப்பட்ட சுயவிவரப் படங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய புதிய அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது. இவை எல்லோருக்கும் பயனுள்ள விதமாகவும், புதிய அம்சங்களை கொண்டதாகவும் உள்ளது. மொத்தத்தில், இதில் வழங்கி உள்ள சிறந்த அம்சம் என்னவென்றால், டெலிகிராம் பயனர்கள் இப்போது ஸ்பாய்லர் விளைவைப் (spoiler effect) பயன்படுத்தி தங்கள் மெசேஜ்களை எளிதாக மறைக்க முடியும். மேலும், அந்த மெசேஜை கிளிக் செய்த பின்னரே அவை தெரியவரும். முன்னதாக, ஸ்பாய்லர் அம்சம் என்பது குறுஞ்செய்தியாக மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது இது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது. மீடியா தேர்வு பகுதியில் மேல்-வலது மூலையில் உள்ள 3 புள்ளி உள்ள மெனு ஐகானைத் கிளிக் செய்வதன் மூலம் புதிய “Hide with spoiler” ஆப்ஷனை பெறலாம்.

அடுத்தாக, டெலிகிராம் செயலியில் புதிய ஸ்டோரேஜ் ஆப்ஷனும் வந்துள்ளது. சிறந்த நிர்வகிப்பிற்காக, டெலிகிராம் ஒரு விளக்கப்படத்தை வழங்கும். இது உங்கள் இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி எவ்வளவு ஆக்கிரமித்து உள்ளது என்பதை நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது. அதைப் பகுப்பாய்வு செய்த பிறகு, உங்கள் வசதிக்கு ஏற்ப புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பொருட்களை நீக்குவதற்கு நீங்கள் முடிவெடுக்கலாம். இந்த படங்கள் நீக்கப்பட்டதும், டெலிகிராம் கிளவுட்டில் இருந்து அவற்றை மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய மற்றும் ஏற்கனவே உள்ள சாட்களுக்கான தானாக நீக்குதல் விதிகளை அமைப்பதற்கான அம்சத்தையும் பெறுவீர்கள்.

இந்த 2 முக்கிய அம்சங்களைத் தவிர, டெலிகிராமின் சமீபத்திய அப்டேட் புதிய முன்னேற்ற அனிமேஷன்கள், வரைதல் கருவிகள் மற்றும் தொடர்புகளில் உள்ள மற்றவர்களுக்காக தனிப்பயன் சுயவிவரப் புகைப்படங்களை அமைக்கும் திறனையும் கொண்டு வருகிறது. மேலும், உங்கள் தொடர்புகளை ஸ்பேம் செய்வதற்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம். இவை மட்டுமில்லாமல், பிரீமியம் டெலிகிராம் பயனர்கள் 10 புதிய அனிமேஷன் எமோஜிகளை இந்த அப்டேட்டுடன் பெறுகின்றனர். நீங்கள் இந்த அப்டேட்டை பெறவில்லை என்றால், உங்களின் கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று டெலிகிராம் செயலிக்கான அப்டேட்டை செய்து கொள்ளலாம்.