பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில், ரயில் பாதையைக் கடந்து சென்றுகொண்டிருந்த 4 சிறுவர்கள் மீது அதிவேகமாக வந்த ஜோக்பானி – தானாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (26301) ரயில் மோதியதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காஸ்பா மற்றும் பூர்ணியா ரயில் நிலையங்களுக்கு இடையே, வடகிழக்கு எல்லை ரயில்வே (NFR) பிரிவின் கீழ் நடந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையின்படி, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட இந்த சிறுவர்கள், அருகிலுள்ள துர்கா பூஜை கண்காட்சியை பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அதிகாலை நேரம் மற்றும் குறைந்த வெளிச்சம் காரணமாக ரயிலை கவனிக்காமல் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பூர்ணியா ரயில் நிலைய கண்காணிப்பாளர் எம். குமார் அளித்த தகவலின்படி, விபத்துக்குள்ளானவர்கள் நடந்து வந்து தண்டவாளத்தை கடக்க முயன்றனர். இதில், 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் ஜானகிநகர் காவல் நிலையத்திற்குட்பட்ட தாகூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்டு குமார் (15), ஜிகர் குமார் (13), சியாம்சுந்தர் குமார் (15) மற்றும் சந்தன்பூர் பங்கா கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் குமார் (15) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த குல்தீப் குமார் (14) பூர்ணியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அரசு ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, விரிவான விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
Read More : மக்களின் பணத்திற்கு ஆபத்து..!! ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு..!! இனி இவர்களுக்கு கடன் கிடையாது..!!