நேபாளத்தில் அதிகரித்து வரும் போராட்டங்களை இந்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசாங்கம் பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, Gen Z தலைமையிலான போராட்டங்கள் வன்முறையாக மாறி வருகின்றன. இந்தத் தடை நாடு முழுவதும் பரவலான வன்முறையைத் தூண்டியது, இறுதியில் கே.பி. சர்மா ஒலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் முன்னர் காணப்பட்ட அமைதியின்மையைப் போலவே, நேபாளத்திலும் இந்தியாவுக்கு எதிரான கதை பரவுவதைத் தடுக்க இந்திய அமைப்புகள் நிலைமையைக் கண்காணித்து வருவதாக உயர்மட்ட புலனாய்வு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் நலன்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை கண்டறிய சமூக ஊடகங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சேனல்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு இந்திய இளைஞர்களிடையே இதேபோன்ற போராட்டங்களைத் தூண்டக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். மாணவர் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் நிறுவனங்களின் செயல்பாடுகளையும் புலனாய்வு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன..
இதனிடையே, நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் நலனையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் கடந்த திங்கள்கிழமை ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த போராட்டம் ஒருக்கட்டத்தில் வன்முறையாக மாறியதில் 22 பேர் உயிரிழந்தனர்.. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்..
தற்காலிக சமூக ஊடகத் தடை விதிக்க வேண்டும், பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் கோரி நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதையடுத்து திங்கள் கிழமை இரவே சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
எனினும் ஊழல் ஆட்சி நடத்தும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரி நேற்றும் போராட்டாக்காரர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.. போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டதை அடுத்து, ஒலி ராஜினாமா செய்து நாட்டின் கட்டுப்பாட்டை இராணுவத்திடம் ஒப்படைத்தார்.
புதன்கிழமை அதிகாலை முதல், கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் ஒழுங்கை மீட்டெடுக்கவும் காத்மாண்டு மற்றும் பிற முக்கிய நகரங்களில் நேபாள இராணுவ துருப்புக்கள் நிறுத்தப்பட்டன. நேற்றிரவு 10 மணிக்கு நாடு தழுவிய பாதுகாப்பை ஏற்றுக்கொண்ட இராணுவம், ஒலி ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு நீடித்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்த காத்மாண்டு, லலித்பூர், பக்தபூர் மற்றும் பிற பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதித்தது.
ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடினமான சூழ்நிலையை தேவையற்ற முறையில் பயன்படுத்திக் கொண்டு, சாதாரண குடிமக்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் சில குழுக்களின் நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்தது.
Read More : பற்றி எரியும் நேபாளம் : “நாங்க நெருப்பு..” 16 வயது மாணவரின் அனல் பறக்கும் பேச்சு மீண்டும் வைரல்.. யார் இவர்?