ராஜஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்றதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக தனது 200வது போட்டியில் தல தோனி விளையாடினார்.
கடந்த 2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் அறிமுகமானது. அன்றுமுதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தி வருகிறார். இந்தியாவில் எந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடினாலும் அங்கு மஞ்சள் ஆர்மி படை குவிந்துவிடுவார்கள். சென்னை வீரர்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ஹோம் க்ரவுண்ட் ஃபீல் தான் இருக்கும். எதிரணிக்கே கொஞ்சம் பொறாமையா தான் இருக்கும் தோனியின் மஞ்சள் படையை பார்க்கும்போது. கில்லி படத்துல விஜய் சொல்லுற மாதிரி “ இந்த ஏரியா, அந்த ஏரிய, எங்கேயுமே எனக்கு, பயம் கிடையாது டா… ஏன்னா ஆல் ஏரியாலேயும், அய்யா கில்லி டா…”. என்ற வசனத்திற்கு ஏற்ப சென்னை அணி வீரர்களுக்கும், தல தோனிக்கும் அவ்வளவு ரசிகர் பட்டாளமே உள்ளன. ‘
இந்தநிலையில், ஐபிஎல் 16வது சீசனின் 17வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதன்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனி விளையாடிய 200-வது போட்டியாகும். இந்த நிலையில் அவர் தலைமையிலான சிஎஸ்கே சாதித்துள்ளது என்ன என்று பார்ப்போம்.
தோனி தலைமையில் 2010, 2011, 2018 மற்றும் 2021 என நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே. 2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. 5 முறை ரன்னர்-அப்பாக சீசனை நிறைவு செய்து உள்ளது. 2 முறை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. இந்த தருணங்கள் அனைத்திலும் சென்னை அணியை வழிநடத்தியது தோனி. 2016 மற்றும் 2017 சீசன்களில் சென்னை அணி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனி ஐபிஎல்-ல் ஒட்டுமொத்தமாக 213 போட்டிகளில் தலைமை தாங்கி, 125 வெற்றியும், 87 தோல்வியும் பெற்றுள்ளார். அவரது வெற்றி சதவீதம் 58.96 ஆகும். மேலும், கேப்டனாக தோனி இதுவரையில் சென்னை அணியை 199 போட்டிகளில் வழிநடத்தி உள்ளார். அதில் 120 வெற்றிகளை சென்னை அணி பெற்றுள்ளது. 78 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.