சீனாவின் ஹுனான் மாகாணம், சாங்ஷா நகரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை வாழ்க்கை துணையாக ஏற்று, நம்பிக்கையுடன் வாழும் போது, அந்த நம்பிக்கை சிதைந்தால் ஏற்படும் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக, பெண் ஒருவர் எடுத்த முயற்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
சாங்ஷா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், பொதுவெளியில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன. அதாவது, “12 ஆண்டுகளாக என்னுடன் தோழியாக இருந்த ஷி, கடந்த 5 ஆண்டுகளாக என் கணவருடன் தொடர்பில் இருந்துள்ளார்” என்ற வாசகம் அந்த பதாகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு பதாகையில், “அலுவலக நேரத்தில் ஹோட்டல்களுக்கு என் கணவருடன் சென்ற ஷிக்கு என் மனமார்ந்த நன்றி!” என எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்த பதாகைகள், சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஹொங்ஷான் சுற்றுலா மேலாண்மை அலுவலக அதிகாரிகள் பதாகைகளை அகற்றினர். இருப்பினும், ஷி என்ற பெயர் பொதுவெளியில் பிரச்சாரம் செய்யப்பட்டதால், தனியுரிமை பாதிப்பு குறித்த கவலை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் ஷான்ஸி ஹெங்டா சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜாவோ லியாங்ஷான், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “பதாகைகளில் கூறப்படும் தகவல்கள் உண்மையல்ல என நிரூபிக்கப்பட்டால், இது ஷியின் தனியுரிமை உரிமைகளை மற்றும் சமூக மதிப்பை கடுமையாக பாதிக்கும்” என கூறினார்.
இந்நிலையில், அந்த மனைவி மற்றும் அவரது கணவரின் பெயர்கள் வெளியாகாத போதும், சம்பவம் பற்றிய விவரங்கள் வெளியாகி, இது தனிப்பட்ட உறவுகளில் ஏற்படும் நம்பிக்கை துரோகம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.