சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது திமுக அரசை கடுமையாக சாடினார்.. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ்நாட்டின் வரலாற்று பங்களிப்பு ஆகியவை எனக்கு எப்போதுமே தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன.. பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பல நாட்டு தலைவர்களுக்கும் திருக்குறளை பரிசாக அளித்திருக்கிறோம்.. தமிழ்நாட்டின் ஞான களஞ்சியத்தோடு உலகத்தை இணைத்திருக்கிறோம்.. காசியில் பல பிள்ளைகள் தமிழில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.. இது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது.
நாங்கள் தமிழ் கலாச்சாரம் பற்றி வெறும் வாய்ப்பந்தல் போடுபவர்கள் இல்லை. நாங்கள் அதனை பாதுகாக்க உறுதிப்பாட்டோடு பணியாற்றி வருகிறோம்.. சில நாட்களுக்கு முன்பு தான் முருகப்பெருமானுக்கு விளக்குப் போடுவது, விவாதப் பொருளானது.. அப்போது நமது தலைவர்கள் பக்தர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தனர்.. அவர்களுக்கு கைத்தட்டி நன்றி தெரிவிப்போம்..
ஆனால், திமுகவும் அவர்களின் கூட்டாளிகளும் தங்களின் வாக்குவங்கியையும் குஷிப்படுத்த நீதிமன்றங்களையும் அவமானப்படுத்தினார்கள்.. தமிழ், தமிழர்கள், தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் எதிரி திமுக.. காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உங்களை அவமானப்படுத்தினார்கள்.. ஆனால் என்.டி.ஏ அரசாங்கத்தில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட வழிகள் ஆராய்ந்து உங்களை கௌரவப்படுத்தினார்கள்..



