சேலம் மாவட்டம் பள்ளபட்டியில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் வசிப்பவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 28 வயதாகிறது. இவரது கணவர் சிவகுமார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். வனிதாவின் சகோதரி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரது 8 வயது மகளுடன் வனிதாவின் வீட்டருகே வசித்து வந்துள்ளார். அந்தச் சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 44 வயதான தமிழரசன் என்பவர், அச்சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து, ரூ.20 கொடுத்துள்ளார். பின்னர், அவளது கையைப் பிடித்து அருகிலிருந்த ஒரு புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுமியின் ஆடைகளைக் களைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி பயந்த்தில் கத்தி கூச்சலிட்ட நிலையில், அவளது 12 வயது அண்ணன் அங்கு வந்து பார்த்துள்ளான். உடனடியாக வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம், “தமிழ் அண்ணா பாப்பாவோட டிரஸ்ஸைக் கழட்டி ஏதோ பண்றாங்க” என்று கூறியுள்ளான். இதனால், பதறிப்போன பெற்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அவர்களைப் பார்த்த தமிழரசன் அங்கிருந்து தப்பித்துவிட்டான்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு, சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தமிழரசன் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழரசன் சிறையில் அடைக்கப்பட்டார்.