விசித்திரமான கனவால், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு சொந்தக்காரரான ஜப்பான் தொழிலதிபர், தனது தொழிலை துறந்து சிவபக்தராக மாறி காவி உடை அணிந்து யாத்திரை மேற்கொண்டுள்ள சமப்வம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகம் டோக்கியோவை சேர்ந்தவர், ஹோஷி தகாயுகி. 41 வயதான இவர், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களை நடத்தி வந்துள்ளார். இருப்பினும், இந்து ஆன்மீகத்தையும் சிவபெருமானின் பக்தியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையை அவர் கைவிட்டார். அதாவது இந்தியாவிற்கு வருகை தந்தபோது ஆன்மீக வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட இவர், தற்போது முழு சிவ பக்தராக மாறியுள்ளார். இவர் தற்போது பால கும்ப குருமுனி, என்று அழைக்கப்படுகிறார்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியின்படி, தகாயுகியின் ஆன்மீகப் பயணம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு பயணம் செய்தபோது தொடங்கியது. அதாவது தமிழக பயணத்தின்போது, பண்டைய பனை ஓலைகளை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய ஜோதிட வாசிப்பு வடிவமான நாடி ஜோதிட அமர்வில் கலந்து கொண்டுள்ளார். ஓலை வாசிப்பில், இவர் தனது கடந்த காலத்தில் இமயமலையில் வாழ்ந்ததாகவும், இந்து ஆன்மீகத்தைப் பின்பற்ற விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, ஜப்பானுக்கு சென்ற அவருக்கு விசித்திரமான கனவு வந்துள்ளது. இதில் அவர் கடந்த காலத்தில் தன்னை உத்தரகண்டில் இருப்பது போல் உணர்ந்துள்ளார். அந்த கனவு அவரது வாழ்க்கையை மாற்றி விட்டது. இதன் பின்னர், தனது தொழிலை நிர்வாகிகளிடம் ஒப்படைத்து விட்டு, சிவ பக்தராக மாறி விட்டார். டோக்கியோவில் உள்ள தனது வீட்டிலும், வீட்டிற்கு அருகேயும் ஒரு சிவன் கோவிலை கட்டியுள்ளார்.
ஜப்பானில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது நண்பர் ரமேஷ் சுந்தரியால் கூறுகையில், தகாயுகி புதுச்சேரியில் 35 ஏக்கர் நிலத்தையும் வாங்கியுள்ளதாகவும், அங்கு ஒரு பெரிய சிவன் கோவிலைக் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் பகிர்ந்து கொண்டார். உத்தரகண்டில் ஒரு ஆசிரமம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்..
இதனை தொடர்ந்து இந்த மாதம், கன்வார் யாத்திரையில் சேர இந்தியா திரும்பினார். தனது 20 சீடர்களுடன் இந்தியா வந்துள்ள அவர், கன்வர் யாத்திரையில் பங்குபெற்று, கங்கை நீரை சுமந்து வெறுங்காலுடன் நடந்து சென்றார். மேலும், கன்வார் யாத்திரையில் பங்குபெறுபவர்களுக்கு, டேராடூனில் 2 நாள் உணவு முகாமையும் நடத்தி வருகிறார்.