தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைப்பதற்கான சூழல் கனிந்துள்ளது. வரும் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 17-ஆம் தேதி உழவர் திருநாள் என வரிசையாக 3 நாட்கள் அரசு விடுமுறை பட்டியலில் உள்ளன.
இந்த விடுமுறை நாட்கள் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், அதற்கு முந்தைய தினமான ஜனவரி 14 ‘போகி’ பண்டிகைக்கும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பொதுமக்களின் இந்த எதிர்பார்ப்பை ஏற்று ஜனவரி 14-ஆம் தேதிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டால், அதனைத் தொடர்ந்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து மொத்தம் 5 நாட்கள் நீண்ட விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், இந்தத் தொடர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, மற்றொரு சனிக்கிழமையை வேலை நாளாக தமிழக அரசு அறிவிக்கக்கூடும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீண்ட விடுமுறையை முன்னிட்டு, சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட இப்போதே தயாராகி வருகின்றனர்.
பொதுமக்களின் பயண வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், தெற்கு ரயில்வே சார்பிலும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், கூட்ட நெரிசலின்றி மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



